நாளைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்!

Australia tour of Sri Lanka 2022

840

இலங்கை அணிக்கு எதிராக நாளை (19) நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து உபாதைகளுக்கு சந்தித்துவரும் நிலையில், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது ஒருநாள் போட்டியில் துடுப்பெடுத்தாடும்போது, உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.

>>சென். லூசியா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் டெரன் சமி

ஸ்டீவ் ஸ்மித்தின் இடது தொடைப்பகுதியின் முன் தசைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவர், கொழும்பில் இடம்பெற்ற அணியின் பயிற்சியிலும் பங்கேற்கவில்லை.

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை இலங்கை அணிககு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்களுக்கான முக்கிய துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். எனவே, அவருடைய உபாதையை நுணுக்கமாக கவனித்து சிசிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதன்காரணமாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்மித்திற்கு பதிலாக கெமரூன் கிரீன், ஜோஸ் இங்கிலிஸ் அல்லது மிச்சல் மார்ஷ் (உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்றார்) ஆகியோரில் ஒருவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பல்லேகலையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, இடது தொடைப்பகுதியில் கனமான கட்டொன்றை கட்டியவாறு ஸ்மித் துடுப்பெடுத்தாடியிருந்தார். எனினும், இதனைத்தொடர்ந்த இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். எனவே, மூன்றாவது போட்டியில் விளையாடுவது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை அஸ்டன் ஏகார், சீன் எபோட், மிச்சல் மார்ஷ், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொயினிஸ் மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் இதுவரையில் இலங்கை தொடரின் போது உபாதைக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<