இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் டில்ருவான் பெரேரா

3366

இலங்கை அணியின் அனுபவ சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் டில்ருவான் பெரேரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை மறுதினம் (22) கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

மீண்டும் அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என குற்றச்சாட்டு

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய ஐசிசியின் விதிமுறையை மீறி…

இந்த நிலையில், இரண்டாவது போட்டிக்கான குழாத்தில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான டில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் எமது இணையத்தளத்துக்கு கிடைத்துள்ளது.

டில்ருவான் பெரேரா இலங்கை அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் இவரின் பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள அகில தனன்ஜய எதிர்வரும் 28ம் திகதி இந்தியாவின் சென்னைக்கு பயணிக்கவுள்ளதுடன், அங்கு பந்துவீச்சு பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு: வில்லியம்சன் இல்லை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள T20I தொடருக்கான…

அகில தனன்ஜய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அகில தனன்ஜய இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு ஐசிசி அனுமதி வழங்கியிருக்கும் போதும், அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அகில தனன்ஜயவின் இடத்துக்கு டில்ருவான் பெரேரா இணைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<