உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்

ICC T20 World Cup 2022

281

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக அதில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நாடுகளின் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் இரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

கிரிக்கெட் உலகினை ஆட்சி செய்யும் பல முன்னணி துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த உலகக் கிண்ணத் தொடர் அவர்களின் ஓய்வுக்கு முன்னர் விளையாடவிருக்கும் கடைசி T20 உலகக் கிண்ணத் தொடராகவும் இருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் நடைபெறவிருக்கும் இந்த T20 உலகக் கிண்ணம் கிரிக்கெட் உலகினை ஆட்சி செய்து வருகின்ற சில துடுப்பாட்டவீரர்களுக்கு மிகவும் முக்கியமான தொடராக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் மாயஜால தருணங்கள்

அந்தவகையில் இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் பிரகாசிக்க எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்டவீரர்கள் ஐந்து பேரினை நோக்குவோம்.

விராட் கோலி – இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி, கிரிக்கெட் விளையாட்டில் வைக்கப்பட்ட பல சாதனைகளின் சொந்தக்காரராக இருக்கின்றார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சுமார் 50 இற்கு கிட்டவான துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் கோலி, கடந்த காலங்களிஒஅ பெரிதாக சோபிக்காததனை அடுத்த எதிர்பாராத விமர்சனங்களையும் சந்திந்திருந்தார்.

ஆனால் ஆசியக் கிண்ண T20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசிய அவர் சுமார் 1000 நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் ஒன்றினைப் பெற்று ஓட்டங்கள் குவிப்பதற்கான தனது நம்பிக்கையினை மீளப் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர்களில் மிகவும் சிறந்த துடுப்பாட்ட சராசரியினைக் காட்டியிருக்கும் கோலி (குறைந்தது 10 இன்னிங்ஸ்கள்), நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள்ளும் காணப்படுகின்றார்.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது விராட் கோலி T20 உலகக் கிண்ணத்தொடர்களில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும், இந்திய அணிக்கு சுமார் 16 வருடங்களின் பின்னர் T20 உலகக் கிண்ணம் ஒன்றை வென்று கொடுப்பதற்குமான வாய்ப்பு அவுஸ்திரேலியாவில் நடைபெறப்போகும் T20 உலகக் கிண்ணத் தொடரில் காணப்படுகின்றது.

T20 உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்

இதேநேரம் விராட் கோலி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் வெளிப்படுத்திய சிறந்த துடுப்பாட்டமும் மலைக்க வைக்கின்றது. இதுவரை அவுஸ்திரேலிய மண்ணில் மொத்தம் 11 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் விராட் கோலி 64.42 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 451 ஓட்டங்களை குவித்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவில் கோலியின் Strike Rate 144.55 ஆகவும் காணப்படுகின்றது.

இந்த தரவுகள் அவுஸ்திரேலியாவில் விராட் கோலி என்னும் துடுப்பாட்ட அரக்கனின் கரம், இந்த T20 உலகக் கிண்ணத்திலும் உயர்ந்து இருக்கப் போவதனை உணர்த்துகின்றன.

மொஹமட் ரிஸ்வான் – பாகிஸ்தான்

T20I துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் நீண்ட காலமாக முதல் இடம் பெற்றிருந்த விராட் கோலியின் முதல் இடத்தினை பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் தட்டிப் பறித்திருந்திருந்தனர். அதில் ஒருவர் பாபர் அசாம். மற்றைய துடுப்பாட்டவீரர் மொஹமட் ரிஸ்வான். இங்கே நாம் மொஹமட் ரிஸ்வானைப் பார்ப்போம்.

2021ஆம் ஆண்டில் T20I போட்டிகளில் மொத்தமாக 1321 ஓட்டங்கள் குவித்த மொஹமட் ரிஸ்வான், கடந்த ஆண்டில் 73.66 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 12 அரைச்சதங்களையும்  விளாசியிருந்தார். அத்தோடு ஆண்டு ஒன்றில் T20I போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரராகவும் அவர் சாதனை செய்திருந்தார்.

இன்னும் அண்மையில் நிறைவடைந்த ஆசியக் கிண்ணத் தொடர் அதன் பின்னரான இங்கிலாந்து அணியுடனான T20I தொடர் என அனைத்திலும் அசத்திய மொஹமட் ரிஸ்வான் தற்போது T20I துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதோடு, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் உடன் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் முக்கோண தொடரிலும் கலக்குகின்றார்.

அந்தவகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் பாபர் அசாமுடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரராக நம்பிக்கை தரக்கூடிய நட்சத்திரமாகவும் இருக்கின்றார். T20I போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட ஜோடி என்கிற சாதனையினையும் பாபர் அசாமுடன் இந்த ஆண்டு மொஹமட் ரிஸ்வான் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் அதிக போட்டிகளில் ஆடாது போயினும் ஏற்கனவே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்க, இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறந்த T20I பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கும் மொஹமட் ரிஸ்வான் அதே சாதக நிலைமைகளைக் கொண்ட உலகக் கிண்ணம் நடைபெறும் அவுஸ்திரேலியாவிலும் சாதிப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.

லியாம் லிவிங்ஸ்டோன் – இங்கிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சிக்ஸர்களை விளாசுவதற்கே ஒரு வீரரினை வைத்திருக்கின்றது என்றால் அது லியாம் லிவிங்ஸ்டோன் என்றால் மிகையாகாது. தான் அறிமுகமாகிய சிறிய காலப்பகுதிலேயே தான் விளாசும் இமாலயய சிக்ஸர்களுக்கு பிரபலமாக மாறியிருக்கும் லியாம் லிவிங்ஸ்டோன், மத்திய வரிசையில் மிகவும் வேகமாக ஓட்டங்களை குவிக்க கூடிய வீரராகவும், சிறந்த வகையில் போட்டிகளை நிறைவு செய்யக்கூடிய (Best Finisher)  துடுப்பாட்டவீரராகவும் காணப்படுகின்றார்.

T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!

தான் விளையாடிய ஆறாவது T20I போட்டியிலேயே வெறும் 42 பந்துகளில் கன்னி T20I சதம் பெற்ற லியாம் லிவிங்ஸ்டோன், சரியான வாய்ப்புக்கள்  கிடைக்கும் போது நீண்ட இன்னிங்ஸ்களை ஆடக்கூடிய துடுப்பாட்டவீரர் என்பதனையும் நிரூபித்திருக்கின்றார்.

இன்னும் அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL T20) தொடரில் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருக்கும் லியாம் லிவிங்ஸ்டோன், அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து சரியான முறையில் அறிந்த ஒரு வீரராகவும் இருக்கின்றார்.

எனவே, நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடர் T20I போட்டிகளில் 150 இற்கு அதிகமான Strike Rate கொண்டிருக்கும் லியாம் லிவிங்ஸ்டோனிற்கு வான வேடிக்கைகளை காட்டுவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பமாகும்.

பெதும் நிஸ்ஸங்க – இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்டவீரர் ஒருவர் நடைபெறவிருக்கும் T20I உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறும் துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பார் எனத் தெரிவித்திருந்தார். அந்த துடுப்பாட்டவீரர் வேறு யாரும் கிடையாது அது பெதும் நிஸ்ஸங்க.

இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெதும் நிஸ்ஸங்க இன்று மூவகைப் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு துடுப்பாட்டவீரராக மாறியிருக்கின்றார். கடைசியாக நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரிலும் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்த பெதும் நிஸ்ஸங்க, ஆசியக் கிண்ணத்தின் பின்னர் இம்முறை உலகக் கிண்ணத்திலும் அணிக்கு நம்பிக்கை தருவார் என நம்பப்படுகின்றது.

அத்துடன் சுழல், வேகப்பந்துவீச்சு இரண்டினையும் சமமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு துடுப்பாட்டவீரராகவும் பெதும் நிஸ்ஸங்க இருக்கின்றார். பெதும் நிஸ்ஸங்க T20I போட்டிகளில் ஓட்டங்கள் விரைவாக பெறுவது சற்று குறைவு என்ற போதிலும் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை அணி பெறுவதற்கான அடித்தளம் ஒன்றை போடுவதில் இவரின் துடுப்பாட்டம் முக்கியத்துவமிக்கது.

T20I துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே இலங்கை துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க இந்த ஆண்டு இலங்கை அணிக்காக இதுவரை T20I போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?

டேவிட் மில்லர் – தென்னாபிரிக்கா

இடதுகை துடுப்பாட்டவீரரான டேவிட் மில்லர் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்காக இப்போதைய நாட்களிலும் மலைக்க கூடிய இன்னிங்ஸ்களை ஆடும் துடுப்பாட்டவீரராக இருக்கின்றார்.

எந்த பந்துவீச்சாளராக இருந்த போதும், எப்படியான ஆடுகளமாக இருந்த போதும் தேவையான சந்தர்ப்பத்தில் தேவையான அளவு ஓட்டங்கள் பெறக் கூடிய ஒரு முன்னணி துடுப்பாட்டவீரராக டேவிட் மில்லர் இருக்கின்றார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான T20I தொடரிலும் நீண்ட இன்னிங்ஸைகளை ஆடியது, தென்னாபிரிக்க அணி சரிவுப்பாதையில் இருக்கும் போது அதனை தூக்கி நிறுத்தக்கூடிய வல்லமை டேவிட் மில்லருக்கு இன்னும் இருக்கின்றது என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.

100 T20I போட்டிகளுக்கு மேல் ஆடியிருக்கும் டேவிட் மில்லர் இதுவரை ஓட்டம் எடுத்த இன்னிங்ஸ்களை அதாவது Ducks எடுக்காமல் அதிக இன்னிங்ஸ்களை ஆடிய துடுப்பாட்ட வீரராகவும் காணப்படுகின்றார். அத்துடன் 100 போட்டிகளுக்கு மேல் சென்றும் டேவிட் மில்லரின் Strike Rate 140 இற்கு அதிகமாகவே காணப்படுகின்றது. இது அவர் எப்போதும் அதிக வேகத்தில் ஓட்டங்கள் குவிப்பார் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது.

இன்னும் துடுப்பாட்டவீரர் என்பதற்கு மேலதிகமாக சிறந்த களத்தடுப்பாளராகவும் இருக்கும் டேவிட் மில்லர் இதுவரை T20I போட்டிகளில் அதிக பிடியெடுப்புக்களை எடுத்த களத்தடுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்களில் நீங்கள் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கும் துடுப்பாட்டவீரரினை கீழே Comment செய்க.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<