சகீப் அல் ஹசன், கார்லோஸ் பரத்வெயிட் ஆகியோருக்கு இரட்டிப்பு அபராதம்

303
Image Courtesy - The Daily Star

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளின் தலைவர்கள் மற்றும் ஏனைய வீரர்களுக்கு உரிய நேரத்திற்குள் பந்துவீசாததன் காரணமாக போட்டி ஊதியத்திலிருந்து ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான சுற்றுத் தொடரின் இறுதி தொடரான டி20 தொடர் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஷகிபின் சகலதுறையால் தொடரை சமன் செய்தது பங்களாதேஷ்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற (20) இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

2 ஆவது டி20 போட்டியின் போது இரண்டு அணிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச தவறியமையால் ஐ.சி.சி இரு அணியின் தலைவர்கள் மற்றும் குறித்த போட்டியில் விளையாடிய ஏனைய 20 வீரர்களுக்கும் அபராதம் விதித்துள்ளது.

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22.1 சரத்தில் குறிப்பிடும் அணித்தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின் படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் போது மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீசும் போது தங்களுக்கு 20 ஓவர்களும் வீசுவதற்கு வழங்கப்பட்ட நேரத்தில் 18 ஓவர்கள் மாத்திரம் வீசியிருந்தனர். இதன் காரணமாக மீதி 2 ஓவர்களையும் வீசுவதற்கு மேலதிக நேரம் தேவைப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது பங்களாதேஷ் அணி இறுதி 1 ஓவரை வீசுவதற்காக மேலதிக நேரம் தேவைப்பட்டது.

அன்றைய போட்டியில் விளையாடிய அணித்தலைவர் தவிர்ந்த ஏனைய வீரர்களுக்கு ஒரு ஓவருக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் என்ற அடிப்படையிலும், இரண்டு அணித்தலைவர்களுக்கும் போட்டி ஊதியத்தில் அதன் இரட்டிப்பு சதவீதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் பங்களாதேஷ் அணி ஒரு ஓவர் வீசுவதற்கு தாமதமாகியமையால் அணித்தலைவர் சகீப் அல் ஹசனுக்கு 20 சதவீதமும், ஏனைய வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு ஓவர்கள் வீச தாமதமாகியமையால் அதன் அணித்தலைவர் கார்லோஸ் பரத்வெயிட்டுக்கு 40 சதவீதமும், ஏனைய வீரர்களுக்கு 20 சதவீதமும் ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

இதனை குறித்த போட்டியின் கள நடுவர்களான தன்வீர் அஹமட், காஷி சுஹைல், மூன்றாம் நடுவர் சைகத் சர்புதுல்லாஹ் மறறும் நான்காம் நடுவர் மஷ்துர் ரஹ்மான் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் இரு அணித்தலைவர்களும் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதனால் மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மேலும் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இவ்வாறான குறைந்த பந்துவீச்சுப் பிரதி பதிவு செய்யப்படுமானால் இரண்டு அணித்தலைவர்களும் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவார்கள் என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

நடுவருடன் முரண்பட்டதால் ஷகீப் அல் ஹசனுக்கு அபராதம்

பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹசனிற்கு கடந்த முதல் டி20 போட்டியின் போது நடுவருடன் முரண்பட்ட காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவ்வாறானதொரு சம்பவம் 2007 ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஒன்றின் போது நடைபெற்றுள்ளது. அப்போது பங்களாதேஷ் அணியின் தலைவராக செயற்பட்ட ஹபீபுல் பஷர், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக செயற்பட்ட ரம்னரேஷ் சர்வான் ஆகியோருக்கு 10 சதவீதமும் ஏனைய வீரர்களுக்கு 5 சதவீதமும் அபராதம் அறவிடப்பட்டிருந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<