ஆஸியிடம் போராடி வீழ்ந்த இலங்கை மகளிர்  

79

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான குழுநிலை போட்டியில் இலங்கை பெண்கள் அணி கடைசி ஓவர் வரை போராடிய நிலையில் 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து மீண்டும் ஒருமுறை ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி அரைச்சதம் ஒன்றை பெற்றபோதும் ஏனைய வீராங்கனைகள் ஈடுகொடுத்து ஆடத் தவறினர்.

சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை இலகு வெற்றி

சசிகலா சிறிவர்தனவின் அபார பந்துவீச்சு மற்றும் சமரி அத்தபத்துவின்…

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கிண்ண டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்திடம் தோற்ற நிலையிலேயே இன்று (24) பேர்த், வக்கா மைதானத்தில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

அவுஸ்திரேலிய பெண்கள் அணியும் தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையிலேயே ஏ குழுவுக்காக இலங்கையை எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில், ஓட்டம் பெறும் முன்னரே ஆரம்ப வீராங்கனை ஹசினி மதுசிக்கா டக் அவுட் ஆனார். எனினும், மறுமுனையில் ஆடிய சமரி அத்தபத்து அதிரடியாக ஆடினார். 38 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 7 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இலங்கை அணி 13 ஓவர்களில் 85 ஓட்டங்களை பெற்று வலுவான ஒட்டங்களை பெறும் வாய்ப்பை அதிகரித்திருந்தது. எனினும் 14ஆவது ஓவரில் அத்தபத்து ஆட்டமிழந்த பின் போட்டி முழுமையாக திசை திரும்பியது.

மத்திய வரிசையில் வீராங்கனைகள் ஓட்ட வேகத்தை அதிகரிக்கத் தவறியதோடு விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் எஞ்சிய 6 ஓவர்களுக்கும் இலங்கை பெண்களால் 31 ஓட்டங்களையே பெற முடிந்தது.

மத்திய வரிசையில் அனுஷ்கா சஞ்சீவனி 31 பந்துகளில் 25 ஓட்டங்களையும் உமேஷா திமேசனி 20 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியால் 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்கு இலங்கை வீராங்கனைகள் ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்தனர். 10 ஓட்டங்களுக்குள் ஆஸி. அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் இலங்கையால் வீழ்த்த முடிந்தது.

ஆஸி. ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலியை ஓட்டம் இன்றி போல்ட் செய்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் உதேசிக்கா பிரபோதனி அடுத்து வந்த ஆஷ்லி கார்ட்னரையும் 2 ஓட்டங்களுடன் பேல்ட் செய்தார். இந்நிலையில் மறுமுனையில் ஆடிய ஆரம்ப வீராங்கனை பேத் மூனியும் 6 ஓட்டங்களுடன் வெளியேறியபோது இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

எனினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெக் லென்னிங் மற்றும் ரிசேல் ஹெய்னி இலங்கையின் எதிர்பார்ப்பை முழுமையாக சிதறடித்தனர். இருவரும் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 123 ஓட்டங்களை எட்டியது. தனது 100ஆவது டி20 போட்டியில் களமிறங்கிய அணித் தலைவி லென்னிங் 44 பந்துகளில் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

அபாரமாக ஆடிய ஹெய்னி 47 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 60 ஓட்டங்களை பெற்றார்.

>>Photos: West Indies tour of Sri Lanka 2020 | 1st ODI<<

இலங்கை சார்பில் பந்துவீச்சில் உதேசிக்கா பிரபோதனியுடன் சசிகலா சிறிவர்தன தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தத் தோல்வியுடன் இலங்கை பெண்கள் அணி இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வியை சந்தித்து ஏ குழுவில் புள்ளிகள் இன்றி பின்னடைவை சந்தித்துள்ளது.

பத்து அணிகள் பங்கேற்கும் பெண்கள் உலகக் கிண்ண டி20 போட்டியின் ஆரம்ப சுற்று ஆட்டங்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடைபெறுகின்றன. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறவுள்ளன. இலங்கை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகளே இருக்கும் நிலையில் அந்த இலக்கை எட்டுவது கடினமான ஒன்றாக உள்ளது.

இலங்கை பெண்கள் அணி அடுத்து வரும் சனிக்கிழமை (29) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. மெல்போர்னில் இரவுப் போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவது இலங்கைக்கு தீர்க்கமானதாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை பெண்கள் – 122/6 (20) – சமரி அத்தபத்து 50, அனுஷ்கா சஞ்சீவனி 25, உமாஷா திமேசனி 20, நிகொலா கரி 2/18, மொலி ஸ்டானோ 2/23

அவுஸ்திரேலிய பெண்கள் – 123/5 (19.3) – ரிசல் ஹெயின் 60, மெக் லென்னிங் 41*, உதேஷா பிரபோதனி 2/17, ஷஷிகலா சிறிவர்தன 2/20

முடிவு – அவுஸ்திரேலிய பெண்கள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க