மலிக்கின் அரைச்சதத்துடன் வெற்றிப் பாதைக்கு திரும்பியது பாகிஸ்தான்

77

பாகிஸ்தான் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்ட சொஹைப் மலிக்கின் அரைச்சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

லாஹுர், கடாபி அரங்கில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது 8 ஆவது டி20 அரைச் சதத்தை பெற்ற சொஹைப் மலிக் 45 பந்துகளில் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் பங்களாதேஷ் நிர்ணயித்த 142 ஓட்ட வெற்றி இலக்கை 19.3 ஓவர்களில் எட்டிய பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச் சதத்தை…

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயீம் 41 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் தமீம் இக்பால் 34 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்தார்.

கடாபி ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தனர்.  

இந்த வெற்றி சர்வதேச டி20 தரவசரிசையில் முதலிடத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கு அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும் பங்களதேஷுக்கு எதிராக சனிக்கிழமை (25) மற்றும் திங்கட்கிழமை (27) நடைபெறவுள்ள போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றாலும் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிடம் தனது முதலாவது இடத்தை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டி இரவில் நடைபெற ஏற்பாடாகி இருந்தபோதும் லாஹுரின் பனிமூட்டமான காலநிலை காரணமாக ஆட்டம் பகல் 2 மணிக்கே ஆரம்பமானதால் 10,000 ரசிகர்கள் வரையே அரங்கில் கூடியிருந்தனர். எனினும் அங்கு 24,000 ரசிகர்கள் போட்டியை பார்க்கும் வசதி உள்ளது.

எனினும் கடந்த 7 டி-20 போட்டிகளில் 6 போட்டிகளில் தோற்று ஒன்று மழையால் கைவிடப்பட்டு பின்னடைவை சந்தித்திருந்த பாகிஸ்தான் அணிக்கு பங்களாதேஷ் நெருக்கடி கொடுக்கத் தவறியது. 

கடந்த ஆண்டு பெப்ரவரிக்குப் பின்னர் தனது முதல் போட்டியில் விளையாடிய சொஹைப் மலிக், தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி 5 பௌண்டரிகளை விளாசியதோடு தனது கன்னிப் போட்டியில் விளையாடிய அஹ்சன் அலியுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 46 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். அஹ்சன் அலி 32 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 36 ஓட்டங்களை பெற்றார்.   

இதுவரை 112 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட 2321 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் சொஹைப் மலிக் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 141/5 (20) – மொஹமட் நயீம் 43, தமீம் இக்பால் 39, ஷஹீன்ஷா அப்ரிடி 1/23

பாகிஸ்தான் – 142/5 (19.3) – சொஹைப் மலிக் 58*, அஹ்சன் அலி 36, ஷெய்புல் இஸ்லாம் 2/27

முடிவு – பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<