புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கு இனிங்ஸ் வெற்றி

208
U19 Cricket - Tamil - 01.10.2016

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று முடிவடைந்த போட்டியில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியை தோற்கடித்து புனித பீட்டர்ஸ் கல்லூரி வெற்றியை சுவீகரித்துக் கொண்டதுடன், ஏனைய போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி, திரித்துவக் கல்லூரி மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரிகள் முதல் இனிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டன.

புனித பீட்டர்ஸ் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

இரண்டாம் நாள் ஆரம்பத்தில் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த புனித அந்தோனியார் கல்லூரிக்கு ருக்ஷான் ரொட்ரிகோ நம்பிக்கை அளித்தார். எனினும் மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, புனித அந்தோனியார் கல்லூரி 78.1 ஓவர்களில் 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ருக்ஷான் ரொட்ரிகோ ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் சந்துஷ் குணதிலக மற்றும் சதுர ஒபேசேகர தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். இதன்படி முதல் இனிங்ஸில் 225 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற புனித பீட்டர்ஸ் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

தமது இரண்டாவது இனிங்ஸிலும் தடுமாறிய புனித அந்தோனியார் கல்லூரி துடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழக்க, புனித அந்தோனியார் கல்லூரி 94 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவிஷ்க தரிந்து அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் அமீன் 4 விக்கெட்டுகளையும் சந்துஷ் குணதிலக 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர். இதன்படி புனித பீட்டர்ஸ் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 131 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டது.

முன்னர், முதல் நாள் நாணய சுழற்சியில் வென்ற புனித பீட்டர்ஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத்  தீர்மானித்தது. லக்ஷின ரொட்ரிகோ (82), மானெல்க டி சில்வா (71), ரன்மித் ஜயசேன (69*) மற்றும்  அனிஷ்க பெரேரா (58) அரைச்சதம் கடக்க, புனித பீட்டர்ஸ் கல்லூரி 53 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித பீட்டர்ஸ் கல்லூரி  (முதல் இனிங்ஸ்) – 339/6d (53)

லக்ஷின ரொட்ரிகோ 82, மானெல்க டி சில்வா 71, ரன்மித் ஜயசேன 69*, அனிஷ்க பெரேரா 58

அரிந்த சதுரங்க 2/63

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இனிங்ஸ்) –  114/10 (78.1)

ருக்ஷான் ரொட்ரிகோ 54*

சந்துஷ் குணதிலக 4/2, சதுர ஒபேசேகர 4/23

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 94/10 (46.3)

அவிஷ்க தரிந்து 37

சந்துஷ் குணதிலக 3/10, மொஹமட் அமீன் 4/42, மானெல்க டி சில்வா 2/12

முடிவு: புனித பீட்டர்ஸ் கல்லூரி இனிங்ஸ் மற்றும் 131 ஓட்டங்களால்  வெற்றி


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித சேர்வேஷஸ் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித ஜோசப் கல்லூரியும் புனித சேர்வேஷஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இனிங்ஸ் வெற்றியை புனித ஜோசப் கல்லூரி பெற்றுக் கொண்டது.

முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித சேர்வேஷஸ் கல்லூரி, முதல் இனிங்ஸ் வெற்றிக்காக மேலும் 89 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் களமிறங்கியது. எனினும் தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில், புனித சேர்வேஷஸ் கல்லூரி 84 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இசுரு உதயங்க அதிகபட்சமாக 21 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ருச்சிர ஏக்கநாயக்க 3 விக்கெட்டுகளையும், ஜெஹான் டேனியல் மற்றும் ஹரீன் குரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

64 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி துரிதமாக ஓட்டங்களைக் குவிக்க தொடங்கியது. அதிரடியாக ஆடிய ஜெஹான் டேனியல் 76 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, புனித ஜோசப் கல்லூரி 36.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் திலான் பிரஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

237 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி மீண்டும் மோசமான துடுப்பாட்டம் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டுகளை இழந்தது. எனினும் தனது அற்புதமான துடுப்பாட்டத்தின் மூலம் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய முதித்த ஹஷான் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித சேர்வேஷஸ் கல்லூரி தோல்வியிலிருந்து தப்பியது. பந்து வீச்சில் அசத்திய ஹரீன் குரே 42 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 148 (56.3)

ஹரீன் குரே 37, தஷான் பெரேரா 26, நிபுண சுமனசிங்க 22

சஷிக்க துல்ஷான் 5/56

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 84 (40.5)

இசுரு உதயங்க 21,

ருச்சிர ஏக்கநாயக்க 4/21, ஜெஹான் டேனியல் 2/45, ஹரீன் குரே 2/14

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 173/8d (36.3)

ஜெஹான் டேனியல் 76, பஹன் பெரேரா 28, ஷெவோன் பொன்சேகா 24, தினெத் சஞ்சய 21

திலான் பிரஷான் 3/42

புனித சேர்வேஷஸ் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 174/8 (57)

முதித்த ஹஷான் 96*, சுபுன் கவிந்த 28, சதரு நெத்மின 24

ஹரீன் குரே 6/42

முடிவு: சமநிலையில் முடிவடைந்தது. புனித ஜோசப் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி


தர்மபால கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

இன்று நிறைவு பெற்ற குழு ‘A’ இற்கான மற்றைய போட்டியில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியும் கண்டி திரித்துவக் கல்லூரியும் மோதிக் கொண்டன. இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இனிங்ஸ் வெற்றியை கண்டி திரித்துவக் கல்லூரி பெற்றுக் கொண்டது.

முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப் பெற்றிருந்த திரித்துவக் கல்லூரி, மேலும் 95 ஓட்டங்களைப் பெற்றால் முதல் இனிங்ஸ் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. அணித்தலைவர் ஷண்முகநாதன் ஷனோகீத் 30 ஓட்டங்களைக் குவிக்க திரித்துவக் கல்லூரி சுமாரான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டது. எனினும் தொடர்ந்து வந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வறை திரும்ப, திரித்துவக் கல்லூரி 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தியாகராஜன் பானுகோபன் 24 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அசத்திய டில்ஷான் டி சில்வா (6/25) மற்றும் சமிந்த சமரசிங்க (4/23) தமக்கிடையே 10 விக்கெட்டுகளையும் பங்கிட்டுக்கொண்டனர். இதன்படி திரித்துவக் கல்லூரி முதல் இனிங்ஸில் 14 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இனிங்சிற்காக களமிறங்கிய தர்மபால கல்லூரி சார்பில் அவிஷ்க தரிந்து 76 ஓட்டங்கள் விளாசினார். துலாஜ் எகொடகே 34 ஓட்டங்களைப் பெற்றார். திரித்துவக் கல்லூரி சார்பாக விமுக்தி நெதுமால் 3 விக்கெட்டுகளையும், ஷண்முகநாதன் ஷனோகீத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்படி 45 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றிருந்த தர்மபால கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

155 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திரித்துவக் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 113 (42)

அவிஷ்க ஹசரிந்த 27, மஹிம வீரகோன் 25, கிஹான் பெரேரா 16

ஷண்முகநாதன் ஷனோகீத் 6/45, விமுக்தி நெதுமால் 2/09

திரித்துவக் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 127 (32.4)

ஷண்முகநாதன் ஷனோகீத் 30, தியாகராஜன் பானுகோபன் 24

டில்ஷான் டி சில்வா 6/25, மற்றும் சமிந்த சமரசிங்க 4/23

தர்மபால கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 168/8d (45)

அவிஷ்க தரிந்து 76, துலாஜ் எகொடகே 34

விமுக்தி நெதுமால் 3/30, ஷண்முகநாதன் ஷனோகீத் 2/62

திரித்துவக் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 44/3 (9)

முடிவு: சமநிலையில் முடிவடைந்தது. திரித்துவக் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி.


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் கண்டி தர்மராஜ கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்த தர்மராஜ கல்லூரி, முதல் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மேலும் 237 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

சச்சிந்த சேனநாயக்க அரைச்சதம் கடந்த போதிலும் தர்மராஜ கல்லூரி 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நிவந்த ஹேரத் 37 ஓட்டங்களையும், தேஷான் குணசிங்க 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித செபஸ்டியன் கல்லூரி சார்பில் பிரவீன் ஜயவிக்ரம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி 113 ஓட்டங்களினால் முன்னிலை பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தேஷான் குணசிங்க 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 295 (76.5)

நிமேஷ் பண்டார 83, நுவனிது பெர்னாண்டோ 49, பிரஷான் பெர்னாண்டோ 49, விசித அபிலாஷ் 45, கிஹான் விதாரண 5/95, ருக்மல் திஸாநாயக்க 3/94

தர்மராஜ கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 182 (71.5)

சச்சிந்த சேனநாயக்க 51, நிவந்த ஹேரத் 37, தேஷான் குணசிங்க 35,

பிரவீன் ஜயவிக்ரம 4/45, நுவனிது பெர்னாண்டோ 2/38

தர்மராஜ கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 115/4 (50)

தேஷான் குணசிங்க 54

முடிவு: சமநிலையில் முடிவடைந்தது. புனித செபஸ்டியன் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி.