எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்

680

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், விஷேடமான வீரர்கள் சிலரை கொண்டிருக்கும் இலங்கை அணி, நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை அணிக்காக இதுவரையில் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அவற்றில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியிருக்கும் வாஸ் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான நிலையில் சமிந்த வாஸ் பேசும் பொழுது ஒரு நாள் போட்டிகளில் புதிய பரிமாணம் ஒன்றை அண்மித்துள்ள இலங்கை அணி தமக்கான சவால்களை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் போது வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

தென்னாபிரிக்காவின் இரண்டு சோகமான உலகக் கிண்ணங்கள்

நீங்கள் திறமையான கிரிக்கெட் அணி ஒன்றுக்கு ஆதரவு வழங்கினாலும்…….

“இலங்கை யாராலும் எதிர்வு கூறமுடியாத அணியாக இருக்கின்றது. அவர்களுக்கு ஒற்றுமையாக இருப்பது அவசியமாகின்றது, அவர்களிடம் (இங்கிலாந்து நிலைமைகளில்) மிகவும் சிறப்பாக செயற்படக்கூடிய திறமை கொண்ட வீரர்களும் காணப்படுகின்றனர். அவர்களிடம் (இலங்கை வீரர்களிடம்) அணி மீதான அந்த ஈர்ப்பும், அணிக்கு இடையிலான ஒற்றுமையும் இருக்குமாயின், இலங்கை உலகக் கிண்ணத்தின் போது நல்ல முறையில் செயற்படும்“ என சமிந்த வாஸ் தெரிவித்தார்.

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் தற்போது 8ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை அணி, உலகக் கிண்ணத்தினை வெல்ல எதிர்பார்க்கப்படும் பத்து அணிகளில் ஒன்றாகவும் உள்ளது. இதேநேரம் இலங்கை அணியை விட ஒருநாள் தரவரிசைகளில் பின்தங்கியவாறு ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகள் மாத்திரமே உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கின்றன.

இந்நிலையில் சமிந்த வாஸ் இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கான தனது ஆலோசனைகளை வழங்குவதில் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“எனக்கு இந்த விளையாட்டு (கிரிக்கெட்) மிகவும் விருப்பமானது, எனது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியினை இதற்காகவே செலவழித்தேன். இதிலிருந்து கற்ற விடயங்களையே இளம் வீரர்களுக்கு என்னால் கொடுக்க முடியும். நான் 20 வருடங்களுக்கு மேல் எனது விளையாட்டை ரசித்திருக்கின்றேன். தற்போது ஒரு பயிற்சியாளராக நான் இளம் வீரர்களுக்கு செய்து வரும் விடயங்களையும் ரசிக்கின்றேன். நான் இளம் பந்துவீச்சாளர்களிடம், குறுக்குவழிகளை நாடாமல் உங்களால் வழங்க கூடிய 100 சதவீத பங்களிப்பினையும் வழங்குங்கள் எனக் கூறுவேன், அத்தோடு உடற்தகுதியில் கவனம் செலுத்தும்படியும் கூறுவேன். மேலும் பந்துவீச்சுக்கான இடைவிடாத பயிற்சிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துவேன். உங்களால் இன்று செய்யக்கூடிய விடயங்களை அடுத்த போட்டிக்காக வைத்திருக்க கூடாது, உங்களது நாட்டிற்காக நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், சாக்கு போக்கு சொல்லுபவர்களாகவும் இருக்க கூடாது, உங்களை மக்கள் விமர்சிக்கும் போது அதனை சரியான முறையில் அணுக வேண்டும்“ என வாஸ் மேலும் பேசியிருந்தார்.

இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற போது அப்போதைய இலங்கை குழாத்தில் இடம்பெற்ற சமிந்த வாஸ், அதன் பின்னர் 2007 மற்றும் 2011 ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்தார். இவ்வாறாக இலங்கை அணி, கடந்த ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தில் காட்டிய சிறந்த பதிவுகள் இம்முறைக்கான உலகக் கிண்ணத்திலும் இலங்கை அணிக்கு வலுச்சேர்க்கும் என வாஸ் தெரிவித்திருந்தார்.

“உலகக் கிண்ணம் ஒன்றை நாங்கள் வெல்லும் போது அது இலங்கையின் கிரிக்கெட்டிற்கு பாரிய திருப்புமுனையாக அமையும் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது. நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்று அதனை இந்த நாட்டுக்கு கொண்டு வந்த போது, நாங்கள் இந்த நாட்டுக்கு மிகப் பெரிய நல்ல விடயம் ஒன்றை செய்ததை உணர்ந்தோம். 1999ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை நாம் (உலகக் கிண்ணத் தொடர்களின்) அரையிறுதிப் போட்டிகளுக்கும், இறுதிப் போட்டிகளுக்கும் தெரிவாகியிருக்கின்றோம். உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான போட்டிகள் வரும் போது, எங்களது வீரர்கள் சிறப்பாகவே செயற்பட்டிருந்தனர். இப்போது இளம் வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவர்கள் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி இரு முனைகளிலும் சிறப்பாக செயற்படுவார்கள் என்பதில் உறுதியாக உள்ளேன்.“

ஐ.பி.எல். விதிமுறையை மீறிய ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் அபராதம்

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) ஈடன் கார்டன்….

உலகக் கிண்ணத் தொடரை நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கும் இலங்கை அணி, அதற்கு முன்னதாக மே மாதம் 19 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<