மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு அழைக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ரூபெல் ஹுசைன்

346
Rubel Hussain

எதிர்வரும் நியூசிலாந்துடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு, உபாதைக்குள்ளாகியுள்ள முஹம்மத் ஷாஹிடுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளார் ரூபெல் ஹுசைனை பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் அழைத்துள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் நேற்று (செவ்வாய்கிழமை) அறிவித்திருந்தனர்.

ரூபெல் ஹுசைன் கடந்த செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுனான தொடரில் பங்களாதேஷ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இறுதியாக விளையாடினார். எனினும் குறிப்பிட்ட போட்டிகளில் முழுத் திறமையையும் வெளிப்படுத்த தவறியதன் விளைவாக, அவர் இங்கிலாந்து அணியுனான சுற்றுப்போட்டி முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்துடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்காக கடந்த  மாத இறுதியில் அறிவித்திக்கப்பட்ட 22 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமிலும் ரூபெல் ஹுசைனை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இணைத்துக்கொள்ளவில்லை.

அணித்தேர்வின்போது ரூபெல் ஹுசைனை கண்டுகொள்ளாத தேர்வாளர்களுக்கு உள்ளூர் T-20 போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் தமது தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் தேர்வாளர் மின்ஹாஜுல் ஆப்டின் கருத்து தெரிவிக்கையில், ”காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் இணைந்து கொண்ட ரூபெல் ஹுசைன், பந்து வீச்சில் பிரகாசிக்கவும் சிறந்த உடல் தகுதியை வெளிப்படுத்தவும் தவறியிருந்தார். அதனால்தான் அவருக்கு தனது உடல்தகுதி மற்றும் திறமைகளில் மீண்டும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டி இருந்தது” என்று தெரிவித்தார்.

பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரிலிருந்து ரங்பூர் ரைடர்ஸ் அணி வெளியேறுவதற்கு முன்னர், அவ்வணிக்காக 12 போட்டிகளில் விளையாடிய ரூபெல் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் ஒருவராக ஷஹீட் இருந்த போதிலும், முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக குறித்த போட்டிகளிலிருந்தும், நியூசிலாந்துடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திலிருந்தும் விலக வேண்டிய நிலைக்கு அவர் உள்ளாகினார்.

பங்களாதேஷ் அணி, நியூசிலாந்திற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டு டிசம்பர் 26ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 24ஆம் திகதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று T-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ள உள்ளது.

கடந்த இரு வருடங்களாக எந்தவொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் பங்குபற்றாத பங்களாதேஷ் அணி, இந்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இரண்டு வாரங்கள் பயிற்சியொன்றை மேற்கொண்டுவிட்டே நியூசிலாந்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.