முன்னாள் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவர், பிரபல வர்ணனையாளர் Richie Benaud காலமானார்

100

அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு மிகுந்த கிரிக்கட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான Richie Benaud  தனது 84 ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) இரவு காலமாகியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த Richie Benaud  நேற்று இரவு நித்திரையில் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்து ஒன்றில் படுகாயங்களுக்கும் உள்ளாகியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கு துக்கதினம் எனவும் மிகச்சிறந்த கிரிக்கட் சம்பியன் ஒருவரை தாம் இழந்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபொட் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேவேளை Richie Benaud  ன் குரலில் தான் வளந்ததாகவும் Benaud மிகச்சிறந்த கிரிக்கட் வீரர், அணித்தலைவர் என்பது மாத்திரமல்ல சிறந்த தலைமைத்துவத்தை உடைய ஒரு மனிதர் எனவும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய அணிக்கு பெரிதும் உதவிபுரிந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ள கிளார்க் அவர் எப்போதும் வெற்றியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்ணனையாளர்களில் ஒருவரான ஜிம் மக்ஸ்வெல் தெரிவிக்கையில் கடந்த 50 ஆண்டு காலமாக மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் செல்வாக்கு மிகுந்த வீரர் ஒருவரை தாம் இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள Richie Benaud  டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ஓட்டங்களையும் 200 விக்கெட்களையும் பெற்றுக் கொண்ட முதல் வீரர் என்ற பெருமையை உடையவராவார்.

1964 ஆம் ஆண்டு கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற Richie Benaud அதன் பின்னர் வர்ணனையாளராக களமிறங்கினார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி கிரிக்கட் வர்ணனைகளில் தொடர்ந்தும் சேவையாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.