2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள்?

142

2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பது தொடர்பிலான முயற்சிகளுக்கு விரைவில் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாகிஸ்தான் சுபர் லீக்கின் ஆரம்ப திகதி அறிவிப்பு

அந்தவகையில் கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் இணைவது தொடர்பிலான இறுதி முடிவு இந்த ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் (IOC) மாநாட்டில் உறுதி செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவானது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலேயே கிரிக்கெட் போட்டிகளை உள்ளடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதன்படி சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இந்த ஒலிம்பிக் தொடரில் ஆடவர், மகளிர் என ஆறு அணிகள் பங்கெடுக்கும் வகையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடரினை பரிந்துரை செய்திருக்கின்றது.

அதேநேரம் ஒலிம்பிக்கில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் T20 போட்டிகளாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான மகளிர், ஆடவர் கிரிக்கெட் அணிகள் ஐ.சி.சி. இன் T20 தரவரிசையில் தெரிவு செய்யப்படவிருக்கின்றது.

ஆறு அணிகள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஒன்றினை ஒழுங்கு செய்வதற்கான காரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.சி.சி. சரியான நிதிமுகாமைத்துவத்தை (Cost Effective) மேற்கொள்ளவே அவ்வாறு செய்கின்றது எனக் கூறியிருக்கின்றது.

எனவே ஐ.சி.சி. இன் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பது தொடர்பிலான இறுதி முடிவு எவ்வாறு அமையும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<