அபார வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

282
Australia vs England

மன்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 24 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன் மூன்று போட்டிகள் தொடரினையும் 1-1 என சமநிலை செய்துள்ளது. 

>> முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இரண்டு அணிகளும் மோதுகின்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியினைப் பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமானது. 

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக்கொண்டார். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் 50 ஓவர்கள் நிறைவுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் தலைவர் இயன் மோர்கன் 42 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்ய, ஜோ ரூட் 39 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஆடிய டொம் கர்ரன் 37 ஓட்டங்களையும் பெற்றனர். இதேநேரம், ஆதில் ரஷீட் 26 பந்துகளுக்கு 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல்பந்துவீச்சாளரான அடம் ஷம்பா 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க மிச்செல் ஸ்டார்க் தனது வேகத்தின் மூலம் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக 232 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்கு சிறந்த ஒரு ஆரம்பத்தினை அதன் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் மார்னஸ் லபச்சானே ஆகியோர் வழங்கினர். இதனால், அவ்வணி வெற்றி இலக்கிற்கான பயணத்தின் ஒரு கட்டத்தில் 144 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. 

எனினும், ஆரோன் பின்ச் மற்றும் மார்னஸ் லபச்சானே ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியாவினை துவம்சம் செய்ய, அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 207 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது. 

>> விராட் கோஹ்லியை ரசிகர்களிடம் பகிரங்கமாக புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் 

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரோன் பின்ச் 73 ஓட்டங்களைப் பெற்றிருக்க, மார்னஸ் லபச்சானே 48 ஓட்டங்களை எடுத்து போராட்டம் காட்டியிருந்தார்.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ், சேம் கர்ரன் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் தெரிவாகினார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடரினை சமநிலை செய்திருக்கும் இங்கிலாந்து அணி, மன்செஸ்டர் நகரில் இடம்பெறவுள்ள தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் புதன்கிழமை (16) விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 231/9 (50) இயன் மோர்கன் 42, ஜோ ரூட் 39, டொம் கர்ரன் 37, ஆதில் ரஷீட் 35*, அடம் ஷம்பா 36/3, மிச்செல் ஸ்டார்க் 38/2

அவுஸ்திரேலியா – 207 (48.4) ஆரோன் பின்ச் 73, மார்னஸ் லபச்சானே 48, கிறிஸ் வோக்ஸ் 32/3, ஜொப்ரா ஆர்ச்சர் 34/3, சேம் கர்ரன் 35/3

முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 24 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<