முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

134
Photo - Getty Images

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. 

இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல். தொடரை நிராகரித்தார் தர்மசேன

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, தமது சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக T20 தொடரில் விளையாடிய பின்னர் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. அந்தவகையில், குறித்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி மன்செஸ்டர் நகரில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமானது.

தொடர்ந்து, போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலியத் தரப்பிற்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் கிளேன் மெக்ஸ்வெல் தன்னுடைய 20ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளுக்கு 77 ஓட்டங்கள் குவித்தார். அதேநேரம், மிச்செல் மார்ஷ் 73 ஓட்டங்கள் பெற்றிருக்க, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 43 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 295 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் சேம் பில்லிங்ஸ் தனது கன்னி ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்து 118 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, ஜொன்னி பெயர்ஸ்டோவ் உம் 84 ஓட்டங்களுடன் போராட்டம் காண்பித்திருந்தார்.

Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் ஷம்பா 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், ஜோஸ் ஹேசல்வூட் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூடிற்கு வழங்கப்பட்டது. அதேநேரம், இரண்டு அணிகளும் மோதுகின்ற அடுத்த ஒருநாள் போட்டி நாளை (12) இடம்பெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 294/9 (50) கிளேன் மெக்ஸ்வெல் 77, மிச்செல் மார்ஷ் 73, மார்க் வூட் 54/3, ஜொப்ரா ஆர்ச்சர் 57/3, ஆதில் ரஷீட் 55/2

இங்கிலாந்து – 275/9 (50) சேம் பில்லிங்ஸ் 118, ஜொன்னி பெயர்ஸ்டோவ் 84, அடம் ஷம்பா 55/4, ஜோஸ் ஹேசல்வூட் 26/3

முடிவு – அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<