இந்த பருவகால FA கிண்ணத்திற்கான நான்காம் சுற்றுக்கான போட்டியொன்றில் லியோ விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த களுத்தறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3-0 என வெற்றியை பெற்றுக்கொண்டது.

இத்தொடரின் மூன்றாம் சுற்றில் புளு ஸ்டார் அணியானது ஹட்டன் ரினௌன் விளையாட்டுக் கழகத்தையும், லியோ அணியானது திஹாரிய யூத் அணியையும் தோற்கடித்திருந்தன.

களுத்தறை வேர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் தேசிய அளவில் உள்ள முன்னணி அணியான புளு ஸ்டார் மிகவும் இலகுவாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவ்வணியினால் மூன்று கோல்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

ரெட் ஸ்டாரை வீழ்த்தி இறுதி 16 அணிகளுக்குள் நுழைந்த கல்முனை பிரில்லியண்ட்

கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் நிறைவுற்ற FA கிண்ணத்திற்கான 32 அணிகள் மோதும் சுற்றுக்குரிய…

அவ்வணியின் தாக்குதல் வீரர்களான பாசித் அமீர், மொஹமட் மஸீர் மற்றும் மொஹமட் ரிஸான் ஆகியோர் பல கோல் வாய்ப்புக்களை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கினர்.

இவ்வாறு போட்டியின் ஆரம்பத்தில் பல வாய்ப்புக்களை தவறவிட்ட பாசித் அமீர், ஒருவாறாக போட்டியின் 18ஆவது நிமிடத்தில் முதல் கோலினை பெற்றுக்கொண்டார். எனினும் அதனை தொடர்ந்தும் லியோ விளையாட்டுக் கழகம் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை கோல் பெற விடாமல் தடுத்து வந்தது.

இந்நிலையில் முதல் பாதி நிறைவடையும் தருவாயில் லியோ அணியின் கோல் காப்பாளர் ஹஷீம் இஷாக்கிற்கு போட்டி நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதுடன் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்றும் வழங்கப்பட்டது. விதிமுறை மீறிய தடுப்பாட்டம் என நடுவர் அசித தரங்க இத்தீர்ப்பை வழங்கிய போதிலும், அந்த தீர்ப்பு குறித்து புளு ஸ்டார் ரசிகர்கள் உட்பட அதிகமானவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

அந்த பெனால்டி உதையினை மொஹமட் இர்ஷான் வெற்றிகரமாக உதைக்க முதல் பாதி 2-0 என நிறைவடைந்தது.

முதல் பாதி: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2 – 0 லியோ விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் புளு ஸ்டார் அணி முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இம்முறையும் அவ்வணி தமது வழமையான விளையாட்டுப் பாணியை வெளிக்காட்டத் தவறியது.

லியோ அணியின் மாற்று கோல் காப்பாளரும் உபாதையின் காரணமாக வெளியேற, அவ்வணிக்கு மீண்டுமொருமுறை கோல் காப்பாளரை மாற்றீடு செய்ய வேண்டியேற்பட்டது. வ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியிலும் லியோ அணியின் தடுப்பு வீரர்கள் இரண்டாம் பாதியில் புத்துணர்ச்சியுடன் சிறப்பாக செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

பலத்த போராட்டத்தின் பின் செரண்டிப் அணியை தோற்கடித்த சுபர் சன்

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ணத்தின்…

இதன் காரணமாக புளு ஸ்டார் அணிக்கு கோல் பெற கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. இரண்டாம் பாதியிலும் பல வாய்ப்புக்கள் கைநழுவிப்போன நிலையில் 78ஆவது நிமிடத்தில் மொஹமட் சஹ்லான் புளு ஸ்டார் அணிக்காக கோல் ஒன்றினை பெற்றுக் கொடுத்து ஆறுதல் அளித்தார்.

இதன்படி போட்டி 3-0 என நிறைவடைந்த போதும், பிரபலமான வீரர்களைக் கொண்ட களுத்துறை வீரர்களின் மோசமான ஆட்டமும் நடுவர்களின் தவறான தீர்ப்புக்களுமே பலரது கவனத்தையும் பெற்றிருந்தன.

முழு நேரம்: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3 – 0 லியோ விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: தாரக சில்வா

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் இப்போட்டி தொடர்பில் லியோ விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிஹால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சிறிய கழகம் என்ற வகையில் இலங்கையின் முன்னணி கழகங்களில் ஒன்றான ப்ளு ஸ்டார் அணிக்கு கடும் சவாலை வழங்கியமை தொடர்பில் நான் பெருமை அடைகின்றேன். கடந்த சுற்றிலும் சம்பியன்ஸ் லீக் அணிகளில் ஒன்றான திஹாரிய யூத் அணியை நாம் தோற்கடித்திருந்தோம்.

இப்போட்டியை பொறுத்த வரையில் நடுவரின் தீர்ப்புக்கள் மிக மோசமாக காணப்பட்டன.  குறித்த சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட சம்பவம் உண்மையில் ஒரு விதிமுறை மீறிய ஆட்டம் அல்ல. அவ்வாறு இருந்தாலும் மஞ்சள் அட்டையே காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் குறித்த நடுவர் எம்மை தெரியாத ஊரிலிருந்து வந்த சிறிய அணி என்றும் வாயை மூடிக்கொண்டு விளையாடும்படியும் தகாத முறையில் திட்டியிருந்தார் எனத் தெரிவித்தார்.

புளு ஸ்டார் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திரதாஸ கருணாரத்ன கருத்து வெளியிடுகையில்,

எமது முக்கிய வீரர்கள் சிலர் இப்போட்டியில் விளையாடவில்லை. என்றாலும் நமது மோசமான விளையாட்டுப் பாணியை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் முன்னணி சுற்றுப்போட்டி என்ற வகையில் FA கிண்ணப் போட்டிகளுக்கு தரமான நடுவர்களை நியமிக்க வேண்டும். குறித்த வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டமை தவறு என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

கோல் பெற்றவர்கள்

புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்பாசித் அமீர் 18′, மொஹமட் இர்ஷான் 45′, மொஹமட் சஹ்லான் 78′