கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் ஐ.சி.சி.

2491
©AFP

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி), லண்டனில் நடைபெற்ற அதனது வருடாந்த பொதுக்கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களுக்கு ஏற்ப கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

அந்தவகையில் ஐ.சி.சி. இன் புதிய விதிமுறைகளுக்கு அமைவாக இனிவரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் வீரரொருவர் தலை உபாதை ஒன்றை எதிர்கொள்ளும் போது அவருக்கு பதிலாக பிரதியீட்டு வீரர் ஒருவரை அணியொன்று குறித்த போட்டியில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிம்பாப்வே கிரிக்கெட்டை இடை நீக்கம் செய்தது ஐசிசி

ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால்…

அதன்படி, இனி குறித்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் தலை உபாதைக்காக  பிரதியீடு செய்யப்படும் வீரர் ஒருவர் களத்தடுப்பில் மட்டுமல்லாது துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் ஈடுபட முடியும்.

ஐ.சி.சி. இன் இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. எனினும், ஐ.சி.சி. போட்டி ஒன்றில் வீரர் ஒருவரை முழுமையாக பிரதியீடு செய்ய குறித்த அணியின் மருத்துவ அதிகாரி விடுக்கும் வேண்டுகோளினை போட்டி மத்தியஸ்தர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.  

இதேநேரம் ஐ.சி.சி. இன் கிரிக்கெட் குழு வழங்கிய அறிவுரை ஒன்றுக்கு அமைய, சர்வதேசப் போட்டிகளில் ஓவர்கள் தாமதமாக வீசிய குற்றச்சாட்டுக்களுக்காக அணித்தலைவர்களுக்கு போட்டித்தடை வழங்கும் நடைமுறை இனி இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில், போட்டி ஒன்றில் தாமதமாக ஓவர்கள் வீசப்படும் சந்தர்ப்பத்தில் அணித்தலைவருக்கும், ஏனைய அணி வீரர்களுக்கும் சம அளவிலான அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>ஐசிசியின் உயரிய கௌரவத்தை பெற்ற சச்சின் டெண்டுல்கர்

இதேவேளை ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணியொன்று வழங்கப்பட்ட நேரத்திற்குள் வீசத்தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், தொடருக்காக வழங்கப்படும் இரண்டு புள்ளிகளை இழக்க வேண்டி ஏற்படும் என கூறப்பட்டிருக்கின்றது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், இனிவரும் காலங்களில் ஐ.சி.சி. நடாத்தும் போட்டிகளில் வீர, வீராங்கனைகளுக்கு உயர்தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதனையும் உறுதி செய்துள்ளது.  அத்தோடு, ஐ.சி.சி. இன் இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் மகளிர் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<