புதிய வடிவில் பாகிஸ்தானுடன் இணைவாரா மிக்கி ஆர்தர்?

54

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய மிக்கி ஆர்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக ESPNcricinfo இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தின் டெர்பிஷெயர் கவுண்டி அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்ற மிக்கி ஆர்தர், ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியுடன் இணைவார் என சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மிக்கி ஆர்தரின் பதவி தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய சக்லைன் முஷ்டாக்கின் பதவிக்காலம் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருடன் நிறைவுக்கு வந்த நிலையில், மிக்கி ஆர்தரை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் நஜாம் சேதி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் நிலவும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த அழைப்பிற்கு மிக்கி ஆர்தர் தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நஜாம் சேதியின் முயற்சியின் பிரதிபலனாக அவர் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியை பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னும் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மிக்கி ஆர்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இணையவழி தலைமைப் பயிற்சியாளராக 2024 வரை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு மிக்கி ஆர்தர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை, இணையவழி பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இணையவழி பயிற்சியாளர் என்ற பெருமையை மிக்கி ஆர்தர் பெறுவார்.

எவ்வாறாயினும், மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் இயக்குநரா? அல்லது இணையவழி பயிற்சியாளரா? அல்லது ஆலோசகரா? என்பது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. என்றாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதுதொடர்பில் விரைவில் அறிவிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதற்கு முன்பு 2018 முதல் 2020 வரை பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் செப்டம்பரில் ஆசிய கிண்ணத்தில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<