கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

Asian Relay Championship 2024

59
Asian Relay Championship 2024

தாய்லாந்தின் பாங்கொங்கில் உள்ள தேசிய விளையாட்டரங்கில் நேற்று (20) ஆரம்பமான அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் 4 x 400 மீற்றர் கலப்பு இன அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது. 

குறித்த போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள் 17.00 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது. வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் அருண தர்ஷன, சயுரி மெண்டிஸ், பசிந்து கொடிகார மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். 

ஜப்பானில் நேற்று (19) நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பிடித்த காலிங்க குமாரகேவிற்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக பசிந்து கொடிகார போட்டியில் பங்குபற்றினார். 

இதனிடையே, 4 x 400 மீற்றர் கலப்பு இன அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 14.12 செக்கன்களில் நிறைவு செய்து இந்திய அணியினர் அந் நாட்டுக்கான தேசிய சாதனையை புதுப்பித்து தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, வியட்நாம் அணியினர் (3:18.45) வெண்கலப் பதக்கத்தை வென்றனர். 

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதே பேட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி போட்டியை 3 நிமிடங்கள் 15.41 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இந்திய அணி தான் தங்கப் பத்தக்கத்தை சுவீகரித்துக் கொண்டது 

இது இவ்வாறிருக்க, இன்று (21) நடைபெறவுள்ள ஆண், பெண் இருபாலாருக்குமான 4 x 100  மீற்றர் மற்றும் 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் இலங்கை அணியினர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<