ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார் தினூஷா

417

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், பாலெம்பேங்கிலும் நாளை (18) ஆரம்பமாகவுள்ள 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இலங்கை தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பு பளுதூக்கல் வீராங்கனை தினூஷா கோமஸ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

>> ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 12 மெய்வல்லுனர்கள் பங்கேற்பு

ஆசிய நாடுகள் இடையே ஒற்றுமை, தோழமையை ஏற்படுத்தும் வகையில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு விழாவில், இம்முறை இலங்கையிலிருந்து 30 விளையாட்டு போட்டிகளுக்காக 177 வீர, வீராங்கனைகளும் 78 அதிகாரிகளும் உள்ளடங்கலாக மொத்தமாக 255 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையிலிருந்து இவ்வளவு அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியொன்று பங்குபற்றுவது இதுவே முதல்தடவையாகும்.

இந்த நிலையில், நாளை (18) நடைபெறும் கோலாகலமான தொடக்க விழாவில் இலங்கை அணிக்கு தேசிய கொடியை ஏந்தி தலைமை தாங்கும் கௌரவம் பளுதூக்கல் வீராங்கனை தினூஷா கோமஸ்ஸுக்கு வழங்கப்படுவதாக இலங்கை ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

தினூஷா கோமஸ்

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினூஷா கோமஸ், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்கலில் இலங்கைக்காக முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீராங்கனையாகவும் அவர் இடம்பிடித்தார்.

>> ஆசிய விளையாட்டு விழாவில் 185 இலங்கை வீர, வீராங்கனைகள்

இம்முறை 30 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக 134 வீரர்களும், 43 வீராங்கனைகளும் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளனர்.

இதில், பளுதூக்கல், மெய்வல்லுனர், மற்றும் குத்துச்சண்டை, ஆகிய விளையாட்டுக்களில் இலங்கை அணி இம்முறை பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் கபடி அணியில் அதிக வீரர்கள் (24) இடம்பெற்றுள்ளனர். இதில், பெண்களுக்கான கபடியில் இலங்கை அணி முதற்தடவையாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பேஸ் போல் மற்றும் ஹொக்கி அணிகளில் தலா 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மெய்வல்லுனர் (12 பேர்), எழுவர் றக்பி (12), நீர்நிலை (05),வில்லாளர் (01), பெட்மிண்டன் (06), கூடைப்பந்தாட்டம் (08), கடற்கரை கரப்பந்தாட்டம் (02), குத்துச்சண்டை (06), படகோட்டம் (01), ஸ்போர்ட்ஸ் (01), கோல்ப் (04), கலைத்துவ உடற்கலை சாகசம் (01), இசைத்துவ உடற்கலை சாகசம் (01), ஹொக்கி (18), கரப்பந்தாட்டம் (14), ஜுடோ (02), கராத்தே (06), ரோலர் ஸ்கேட்டிங் (04), துடுப்புப் படகோட்டம் (04), பாய்மரப் படகோட்டம் (01), ஸ்குவாஷ் (04), மேசைப்பந்தாட்டம் (02), டய்க்வொண்டோ (06), டென்னிஸ் (04), மூவம்ச நிகழ்ச்சி (01), பளுதூக்கல் (04), மல்யுத்தம் (01), வூஷு (02) ஆகிய போட்டிகளுக்காக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையிலுள்ள வீரர்களுக்கு ஆசிய நாடுகளுடன் போட்டியிட்டு திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அதிகளவான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுத்ததாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

>> 4 தேசிய சாதனைகள், 11 போட்டிச் சாதனைகளுடன் தேசிய மெய்வல்லுனர் தொடர் நிறைவு

இந்நிலையில் ஆசிய நாடுகள் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு முன்னர் போட்டி அட்டவணைப்படி வீரர்கள் கட்டம் கட்டமாக இந்தோனேஷியா நோக்கிப் பயணமாகினர். இதில் நீச்சல், டய்க்வொண்டோ மற்றும் வூஷு ஆகிய போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்கள் கடந்த 15ஆம் திகதி ஜகார்த்தாவைச் சென்றடைந்ததாக இலங்கை ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ மற்றும் காமினி ஜயசிங்க

இதேநேரம், ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் பிரதானியாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படைப்பிரிவின் பிரதானியும், இலங்கை கைப்பந்து சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ செயற்படவுள்ளார். உப பிரதானியாக முன்னாள் சிறச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி ஜயசிங்கவும் செயற்படவுள்ளனர்.

எனவே, 63 வருடகால வரலாற்றைக் கொண்ட ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி, இதுவரை 10 தங்கம், 11 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளளன.

அதிலும், இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த கௌரவம் மெய்வல்லுனர் விளையாட்டை சாரும்.

இதில் 27 வீரர்கள் 46 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளதுடன், 1951ஆம் ஆண்டு இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எம். அக்பர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<