4 தேசிய சாதனைகள், 11 போட்டிச் சாதனைகளுடன் தேசிய மெய்வல்லுனர் தொடர் நிறைவு

59

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்ய்பட்ட 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இருபாலாரிலும் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனராக இலங்கை இராணுவத்தின் நீளம் பாய்தல் வீரர் ஜானக பிரசாத் விமலசிறியும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக இலங்கை இராணுவத்தின் நிலானி ரத்னாயக்கவும் தெரிவாகினர்.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த மூன்று தினங்களாக கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், நாடாளவிய ரீதியிலிருந்து 750 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

Photos: National Athletic Championship 2018 – Day 1

ThePapare.com | Waruna Lakmal| 03/08/2018 Editing and re-using …

இப்போட்டிகளில் 4 தேசிய சாதனைகளும், 11 போட்டி சாதனைகளும் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் தேசிய சாதனை நிகழ்த்திய நால்வரும் (அஜித் குமார, லக்ஷிகா சுகன்தி, நிலானி ரத்னாயக்க மற்றும் கயான் ஜயவர்தன) தமது சொந்த சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில், போட்டிகளின் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்க (9 நிமிடங்கள் 46.76 செக்.) மற்றும் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கயான் ஜயவர்தன (56.40 மீற்றர்) ஆகியோர் புதிய தேசிய சாதனை நிலைநாட்டினர்.

அத்துடன், ஆண்களுக்கான குண்டு போடுதலில் சமித ஜயவர்தன (16.23 மீற்றர்) புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார்.

இதேநேரம், போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளின் (டெகத்லன்) நடப்புச் சம்பியனான அஜித் குமார கருணாதிலக்க, 2ஆவது தடவையாகவும் 7000 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அதேபோல, பெண்களுக்கான 7 அம்சப் போட்டிகளின் (ஹெப்டெத்லன்) நடப்புச் சம்பியனான லக்ஷிகா சுகன்தி, 4906 புள்ளிகளைப் பெற்று தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.

  • முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட விதூஷிகா லக்ஷானி

அத்துடன், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்க புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார். போட்டியை அவர் 4 நிமிடங்கள் 17.48 செக்கன்களில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதேநேரம், தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். குறித்த போட்டியை 10.41 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அனித்தா, சண்முகேஸ்வரன், அஷ்ரப்புக்கு வெற்றி

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் …

இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.30 செக்கன்களில் நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க, மற்றும் அதே போட்டியை 53.89 செக்கன்களில் நிறைவு செய்த நிர்மாலி மதுஷிகா ஆகியோர் தத்தமது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவுசெய்து முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், போட்டிகளின் இறுதி நாளான நேற்று (06) நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட இலங்கை இராணுவத்தின் விதூஷா லக்ஷானி, 13.60 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

இதேநேரம், பெண்களுக்கான 800 மீற்றரில் தேசிய சம்பியனான கயன்திகா அபேரத்னவை வீழ்த்திய நிமாலி லியனாரச்சி புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார். போட்டியை அவர் 2 நிமிடங்கள் 04.03 செக்கன்களில் நிறைவு செய்தார்.

அத்துடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சம்பத் ரணசிங்க (78.79 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்தார்.

பிரசாத்துக்கு 3 விருதுகள்

தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள எட்டு வீரர்கள் பங்குகொண்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டி நேற்று (05) மாலை நடைபெற்றது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜானக பிரசாத், 8.14 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்த மைல்கல்லை தனது இறுதி முயற்சியில் அவர் பெற்றுக்கொண்டார்.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் …

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் 7.89 மீற்றர் உயரம் பாய்ந்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஜானக பிரசாத், குறித்த போட்டிகளின் தகுதிச் சுற்றில் 7.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் எச்.ஜி சம்பத் (8.12 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், தேசிய சம்பியனான அமில ஜயசிறி (8.02 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, நீளம் பாய்தலில் புதிய போட்டி சாதனை நிகழ்த்திய ஜானக பிரசாத், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இருபாலாரிலும் அதி சிறந்த மெய்வல்லுனருக்காக வழங்கப்படுகின்ற என்.வைரநாதன் ஞாபாகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தார்.

அத்துடன், ஆண்களில் அதி சிறந்த மெய்வல்லுனருக்கான வில்டன் பார்ட்லீட் சவால் கிண்ணம் மற்றும் பாய்தல் நிகழ்ச்சிகளில் அதி சிறந்த மெய்வல்லுனருக்கான என்.எம் வாசகம் சவால் கிண்ணம் ஆகியவற்றையும் அவர் பெற்றுக்கொண்டார்.

சிறந்த வீராங்கனையாக நிலானி

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2 போட்டி சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை இராணுவத்தின் நிலானி ரத்னாயக்க, பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனருக்கான கலம்போ கென்டீன் குழு சவால் கிண்ணத்தை சுவீகரித்தார்.

போட்டிகளின் முதல் நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க, குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 46.76 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்ற நிலானி ரத்னாயக்க புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார். குறித்த போட்டியை அவர் 4 நிமிடங்கள் 17.48 செக்கன்களில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இளம் வீரர் அருணவுக்கு சிறப்பு விருது

குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதி சிறந்த மெய்வல்லுனருக்காக வழங்கப்படுகின்ற ஹோர்லிக்ஸ் சவால் கிண்ணத்தை, தேசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனான அங்குரம்பொட வீரகெப்படிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன பெற்றுக்கொண்டார்.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னாள் சம்பியன்கள் அனைவரையும் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்திய இளம் வீரர் அருண, அதற்காக 46.16 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

தமிழ் பேசும் வீரர்களும் அபாரம்

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என 3 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தா ஜெகதீஸ்வரன், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் ஆகிய ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதேவேளை, போட்டிகளின் இறுதி நாளான நேற்று (05) நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் இறுதிப் போட்டியில் லங்கா லயன்ஸ் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நிகவெரட்டியவைச் சேர்ந்த இளம் வீரரான மொஹமட் சபான் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியை அவர் 21.34 செக்கன்களில் பூர்த்தி செய்தார்