அழகாய்… ஆனந்தமாய்… நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு திருவிழா

71

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்ராவின் தலைநகர் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு வார காலம் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று இரவு (02) நிறைவடைந்தது.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில்…

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு விழா நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி, 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்று பதக்கங்களும் வழங்கப்பட்டன.

கோலாகல நிறைவு

இரண்டு வார காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஆசிய விளையாட்டு விழா நேற்றிரவு நிறைவு பெற்றது. நிறைவு விழா ஜகார்த்தாவில் உள்ள 76 ஆயிரம் பேர் அமரும் இருக்கை வசதி கொண்ட ஙிலோரா பங் கர்னோ விளையாட்டரங்கில் கோலாகலமாக அரங்கேறியது.

இந்தோனேஷிய உப ஜனாதிபதி மொஹம்ட் யூசுப் கர்லா தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பக், ஆசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஷேக் அஹ்மத் அல்பஹாத் அல்சபாஹ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

மைதானத்தில் இலேசாக மழை பெய்தாலும், அது நிறைவு விழாவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவில்லை. டிரம்ஸ் கலைஞர்கள் மைதானத்தின் நடுவேஇந்தோனேஷியாஎன்ற ஆங்கில எழுத்து வடிவில் அணிவகுத்து நிற்க, வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. பின், ‘ஒரே ஆசியாஎன்பதை பறைசாற்றும் வகையில் இந்த தொடரில் பங்கேற்ற ஒவ்வொரு நாடுகளின் தேசிய கொடி மற்றும் வீர, வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

நிரல்படுத்தல் போட்டியில் இலங்கை அணிக்கு மீண்டுமொரு வெற்றி

ஆசிய விளையாட்டு விழாவில் 13 தொடக்கம்16…

இதன் பின்னர் லேசர் ஒளி வெள்ளத்திற்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், டிரம்ப்ஸ் இசை, உள்ளூர் பிரபலங்களின் பரவசப்படுத்திய பாடல்களால் அரங்கையே அதிர்ந்தது. இந்திய பாடகர் சித்தார்த் சிலாதியா, ‘ஜெய் ஹோஉள்ளிட்ட சில இந்தி பாடல்களை பாடி அசத்தினார். அவ்வப்போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையால் இரவே பகல் போல் ஜொலித்தது. ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நிறைவு விழா சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்றன.

அடுத்த போட்டி எங்கு?

முன்னதாக இந்த ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு பெறுவதாக ஆசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஷேக் அஹ்மத் அல்பஹாத் அல்சபாஹ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். போட்டியை நடத்தியதில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று இந்தோனேஷியாவை பாராட்டிய அல் பஹாத், ‘இந்த அழகான தேசத்தை விட்டு நாங்கள் வருத்தமுடன் செல்வதால் தான் வானமே அழுகிறது. மறக்க முடியாத அற்புதமான நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம்என்று குறிப்பிட்டார்.

அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெறவுள்ளது. இதன்மூலம் 3ஆவது முறையாக சீனாவில் ஆசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கு முன், 1990 (பீஜிங்), 2010இல் (குவான்சு) அங்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி ஆசிய ஒலிம்பிக் கொடி மற்றும் ஆசிய விளையாட்டின் தீபத்துக்குரிய கோல் ஆகியவை சீனாவிடம் வழங்கப்பட்டது. பின் சீனா சார்பில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

2032 ஒலிம்பிக்

உலகில் அதிகளவு முஸ்லிம்கள் வாழுகின்ற இந்தோனேஷியாவில் இவ்வாறான மிகப் பெரிய விளையாட்டு விழாவொன்று நடைபெற்றது இதுவே முதல்முறையாகும். எனவே வெற்றிகரமாக ஆசிய விளையாட்டு விழாவை இந்தோனேஷியா நடாத்தியிருப்பதால் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமம் அந்நாட்டு ஜனாதிபதியினால் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பக்கிடம் விடுக்கப்பட்டது. இதற்கு அவர் வரவேற்பும் தெரிவித்தார்.

கடைசி தங்கம்

ஆசிய விளையாட்டில் இம்முறை கடைசி தங்கப் பதக்கத்தை ஜப்பான் தட்டிச் சென்றது. நேற்று நடைபெற்றடிரையத்லான்கலப்பு அணிகளுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பான் அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. தென் கொரியா, ஹொங்கொங் அணிகளுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தது.

மதிப்பு மிக்க வீராங்கனை

இம்முறை ஆசிய விளையாட்டின் மதிப்பு மிக்க விளையாட்டு நட்சத்திரமாக ஜப்பான் நீச்சல் வீராங்கனையான 18 வயதுடைய இகீ ரிகாகோ தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆசிய விளையாட்டில் அவர் நீச்சலில் 6 தங்கம், 2 வெள்ளிப் பதக்கம் வென்று அமர்க்களப்படுத்தினார். ஆசிய விளையாட்டில் மதிப்பு மிக்க வீரர் விருது 1998ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறும் முதல் வீராங்கனை இவர் தான். விருதுடன் ரூ.35 இலட்சம் பரிசுத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

சீனா ஆதிக்கம்

பதக்கப் பட்டியலில் மொத்தம் 37 நாடுகள் இடம்பிடித்துள்ளன. வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய சீனா 132 தங்கம் உட்பட 289 பதக்கங்கள் குவித்து, பதக்கப் பட்டியலில் கம்பீரமாக முதலிட அரியணையில் ஏறியது. நீச்சலில் மட்டும் சீனா 19 தங்கம் உட்பட 50 பதக்கங்களை கபளீகரம் செய்தது. பதக்கப் பட்டியலில் 1982ஆம் ஆண்டில் இருந்து அதாவது 10ஆவது தடவையாகவும் சீனா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் 75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம் என்று மொத்தம் 205 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தை தட்டிச்சென்றது. 1994ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2ஆவது இடத்தைப் பிடித்த ஜப்பானுக்கு நீச்சலில் கிடைத்த 19 தங்கம் உட்பட 52 பதக்கங்களே இந்த நிலையை எட்டுவதற்கு பக்கபலமாக இருந்தது.

>> ஆசிய விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தை பெறும் வாய்ப்பை இழந்த இலங்கை

தென் கொரியா 49 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி மூன்றாவது இடத்தைப் பெற்றது. போட்டியை நடத்திய இந்தோனேஷியாவுக்கு (31 தங்கம்) 4ஆவது இடமே கிடைத்தது. ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் சுமார் 56 வருடங்களுக்குப் பிறகு இந்தோனேஷியா அதிக தங்கப் பதக்கங்ளை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதற்கு முன்பு அந்த நாடு ஒரு போட்டித் தொடரில் 77 பதக்கங்களுக்கு மேல் பெறவில்லை. ஆனால் இம்முறை ஆசிய விளையாட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 9 விளையாட்டுகளில் மட்டும் இந்தோனேஷியா 20 தங்கத்தை வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைக்கு ஏமாற்றம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 30 விளையாட்டு போட்டிகளுக்காக 176 வீர, வீராங்கனைகளும் 78 அதிகாரிகளும் உள்ளடங்கலாக 255 பேர் கலந்துகொண்டிருந்தனர். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையிலிருந்து இவ்வளவு அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியொன்று பங்குபற்றியிருந்தமை இதுவே முதல்தடவையாகும்.

எதுஎவ்வாறாயினும், கடந்த 15 நாட்களில் இலங்கை சார்பாக 176 வீர வீராங்கனைகள் குழுநிலை மற்றும் தனிநபர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த போதிலும் அவர்களால் ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முயாது போனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 2010, 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையால் எந்தவொரு பதக்கங்களையும் வெல்ல முடியாது போனமை நினைவுகூறத் தக்கது.

இதில், குழு நிலைப் போட்டிகளான ஹொக்கி, கடற்கரை கரப்பந்தாட்டம், கபடி, உள்ளக கரப்பந்தாட்டம், 3X3 கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றின் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிகளைப் பெற்ற போதிலும், பதக்கங்களை வெல்லும் அளவிற்கு இலங்கை அணி வீரர்களால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.  

அதேபோல, இலங்கைக்கு ஓரிரு பதக்கங்களை வென்று கொடுக்கின்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்கள் தகுதிபெற்றிருந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாமல் போனது.

எனினும், நீச்சல், மெய்வல்லுனர் மற்றும் எழுவர் றக்பி போட்டிகளில் இலங்கை அணி அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<