அடுத்த வருடத்துடன் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவது சந்தேகம்

255
Future of Champions Trophy back in doubt

ஐ.சி.சி. தரவரிசையில் 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகியவை முக்கியமான அணிகள்.

இந்த அணிகளை ஒன்றிணைத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் (ஒருநாள் கிரிக்கெட்) உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் நான்கு வருடத்திற்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை ஐ.சி.சி. நேரடியாக நடத்துகிறது. இதில் வரும் வருமானம் ஐ.சி.சி.க்குதான் அதிக அளவில் வந்து சேரும். டி20 தொடர் மூலம் அதிக வருமானம் வருவதால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

இந்த தொடர்களில் 13 அணிகளும் பங்கேற்க வாய்ப்புக் கிடைப்பதில்லை. 10 அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு அனுமதிக்கப்படும். சாம்பியன் டிராபி தொடரில், தரவரிசையில் முதன்மையாக இருக்கும் 8 அணிகள்தான் பங்கேற்க முடியும்.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவற்றுடன் பங்களாதேஷ் அணி 8ஆவது அணியாக இடம்பிடித்து மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியேற்றியுள்ளது. பின்தங்கிய நிலையில் இருக்கும் ஜிம்பாப்வே, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கும் ஐ.சி.சி. நடத்தும் தொடரில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.

ஐ.சி.சி. நடத்தும் தொடரிலேயே வாய்ப்புக் கிடைக்காத இந்த அணிகளுடன் இருநாட்டு தொடர்களில் விளையாட இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகள் முக்கியத்துவம் காட்டுவதில்லை. இதனால், கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இந்த அணியால் முதன்மை அணியுடன் விளையாடும் வாய்ப்பில்லாமல் போகிறது.

மேலும், முக்கிய அணிகள் மட்டும் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் தரவரிசையில் முதல் இடம்பிடிக்கும் அணி தனது முழுத்திறமையில்தான் வந்ததா? என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் ஐ.சி.சி. 13 நாடுகளுக்கிடையில் மூன்று வருடங்கள் ஒருநாள் லீக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒரு நாடு மற்ற நாடுகளுடன் தலா மூன்று முறை மோத வேண்டும். அதேபோல் அனைத்து நாடுகளிலும் சென்று விளையாட வேண்டும்.

இதன்அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன் கோப்பைக்காக மோதும். இந்தத் தொடர் நடைபெற்றால்தான் உண்மையான நம்பர் ஒன் அணி எது என்று தெரியவரும் என்று ஐ.சி.சி. நினைக்கிறது. இந்தப் போட்டி சுமார் மூன்று வருடங்கள் நடைபெறும் என்பதால் 2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பயின்ஸ் டிராபி தொடர் ரத்து செய்யப்படும் எனத்தெரிகிறது.