பனாகொடையில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான பிரீமியர் எமர்ஜிங் லீக் போட்டியில் இலங்கையின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன போட்டிக்கான தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கையில் முறிவுக்கு உள்ளான குணரத்ன தனது காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெற்றுள்ளார். எனினும் போட்டிக்கான போதிய உடல் தகுதி இல்லாததால் அவரால் எதிர்வரும் இந்திய தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல்போனது.

“அசேல உடற்தகுதியுடன் இருப்பதோடு மருத்துவ ரீதியிலும் நல்ல நிலையில் உள்ளார். எனினும் அவர் மூன்றரை மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. உலகின் மிகச் சிறந்த அணியுடன் ஆடும்போது ஆட்ட திறனில் உச்சத்தில் இருக்கும் வீரர்களே தேவைப்படுகின்றனர். எல்லாம் சரியாக இடம்பெற்றால் அவர் ஒருநாள் அணிக்கு திரும்புவார்” என்று இலங்கையின் தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

அண்மைய நாட்களில் அதிகமான தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட்…

இந்நிலையில் குணரத்ன 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்ததோடு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதேவேளை வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தரிந்து தர்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் கழகத்தை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. குணரத்ன 20 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் நவீன் கவிகாரவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

 போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் கழகம் – 200 (53.3) – சன்ஜன டி சில்வா 56, ஷமீர வீரசிங்க 47, கீத் குமார 32, மெத்சித் ஜயமான்ன 19, தரிந்து தர்ஷன 5/25, கீதால் பெர்னாண்டோ 3/28

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 139/6 (33) – சன்ஜிக்க ரித்ம 24*, லியோ பிரான்சிஸ்கோ 31, துலின டில்ஷான் 34, சிதும் பீரிஸ் 19, அசேல குணரத்ன 17, நவீன கவிகார 4/45