லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன?

1968

போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார்.

இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம்பாப்வே  அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரினையும் சமப்படுத்திக் கொண்டது.

இந்தப் போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்திருந்த சந்தகன்,  

“ கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்னர், ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தேன். நீண்ட இடைவெளியின் பின்னர் போட்டியொன்றில் விளையாடும் போது, உங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை மிகவும் அவசியம். எனக்கு, என்னைச் சுற்றியிருந்த அனைவரும் நம்பிக்கையூட்டி என்னை வலுப்படுத்தியிருந்தனர். நாங்கள் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிரான சில திட்டங்களுடன் போட்டியில் களமிறங்கினோம். எமது திட்டங்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட, மிகவும் சிறப்பாகவே எமக்கு உதவியிருந்தது. நாங்கள் களத்தடுப்பில், சில மாற்றங்களை மேற்கொண்டிருந்ததோடு, காற்றின் உதவியுடன் பந்துகளை மெதுவாக வீசியிருந்தோம். இன்னும், முதலாவது ஒரு நாள் போட்டிக்குப் பின்னர் நாங்கள் கதைத்திருந்த சில உத்திகளையும் நடைமுறைப்படுத்தியிருந்தோம். “ என்றார்

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி

சந்தகன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணிக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தும், அவருக்கு அத்தொடரின் போட்டிகள் எதிலும் விளையாட வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு, இலங்கை அணியின் முகாமைத்துவமும், நிர்வாகமுமே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த அவர் பின்வரிசையில் இருந்து இலங்கை அணியின் போட்டிகளைப் பார்ப்பவர்களில் ஒருவராக காணப்பட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே அணியுடன் ஏற்பட்ட அவமானத் தோல்வியினை அடுத்து சுழல் வீரர்களான அமில அபொன்சோ மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் முதல் பதினொருவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலாக இலங்கை அணியின் தேர்வாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வகைப்போட்டியில் இலங்கை அணியின் பிரதான சுழல் வீரர்களில் ஒருவராக மாறுவதற்கு லக்ஷன் சந்தகனிற்கு வாய்ப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ நான் சுகவீனமுற்றிருந்த காரணத்தினால், எனக்கு பயிற்சி ஆட்டங்களில் கூட விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. அதோடு, உடல் நிலை சரியில்லாத காரணத்திற்காக நான் வீட்டிற்கும் அனுப்பபட்டிருந்தேன். ஒவ்வொரு போட்டியின் போதும், எனக்கு புதிய வாய்ப்பொன்று கிடைக்கின்றது. எனவே, நான் அந்த வாய்ப்புக்களை சரிவர உபயோகப்படுத்தி அதிக விக்கெட்டுக்களை அணிக்காக பெற முயற்சி செய்ய வேண்டும். “

என மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன்னர், இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க மைதானத்தில் வைத்து சந்தகனிற்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

இது தொடர்பில் குறிப்பிட்ட இளம் வீரர் தந்தகன்,

“ அவர் (அசங்க குருசிங்க) உள்ளூர் கழக ஆட்டங்களில் ஆடுவது போன்று என்னுடைய இயற்கையான பாணியிலான ஆட்டத்தினை வெளிக்காட்டுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதோடு, என்னுடைய அனைத்து வகையான பந்து வீச்சு முறைமைகளையும் பரிசோதிக்க எனக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. நீண்ட காலமாக நான் சர்வதேச போட்டியொன்றில் விளையாடியிருக்கவில்லை. எனவே, அதற்காக என்னை அதிக அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.” என்றவாறு சந்தகன் தனது பேச்சினை தொடர்ந்திருந்தார்.

SAndakan 02

விருந்தாளி அணியினரான ஜிம்பாப்வே வீரர்கள், முதலாவது ஒரு நாள் போட்டி போன்று இப்போட்டியிலும் அந்த போட்டியில் காட்டியிருந்த அதே துடுப்பாட்ட பாணியினை வெளிக்காட்டி இலங்கையின் சுழல் வீரர்களை தமக்கு சாதமாகப் பயன்படுத்த முயற்சித்திருந்தனர். எனினும், இலங்கை அணியானது இப்போட்டியில் அவர்களது துடுப்பாட்டத்தினை தமது நுட்பங்கள் மூலம் மடக்கி, முதல் போட்டிக்குப் பதிலடி கொடுத்திருந்தது.  

கன்னிப் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் பெற்று புதிய சாதனை படைத்த வனிந்து ஹசரங்க

 

“ போட்டியின் ஆடுகளமானது எமக்கு சாதமாக அமையாத காரணத்தினால் பந்துகள் அனைத்தையும் விக்கெட்டிற்கு நேராகவே வீசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருந்தோம். எங்களுக்கு அவர்களது, ஸ்வீப் அடிகளையும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிகளையும் கட்டுப்படுத்துவதே மிகவும் தேவையாக காணப்பட்டிருந்தது. எனவே, பந்துகளை மெதுவான வேகத்துடன் விக்கெட்டினை நோக்கி வீசியிருந்தோம். இதன் மூலம், அவர்கள் எங்கள் கைகளிலிருந்து சென்ற பந்துகளை அடிப்பதில்  மிகவும் சிரமம் கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன். “ என சந்தகன் தாம் பயன்படுத்திய பந்து வீச்சு உத்திகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

சந்தகன் தனது முழு ஓவர்களினையும் வீசி முடித்திருந்த தருணத்தில், மற்றுமொரு முழங்கை சுழல் பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, தான் வீசிய போட்டியின் 34ஆவது ஓவரில் ஹட்ரிக் விக்கெட்டை எடுத்து, ஜிம்பாப்வே  அணியின்  முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை முழுமையாக முடித்திருந்தார்.

இதன் மூலம், இலங்கை சார்பாக, தான் அறிமுகமாகிய முதலாவது ஒரு நாள் போட்டியிலேயே, ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்னும் சாதனையை ஹசரங்க பதிவு செய்து கொண்டார்.

“ ஒரு சுழல் வீரராக, தன்னிடம் போட்டியில் வெற்றியாளர் ஆகுவதற்குரிய அனைத்து திறமைகளினையும் வனிந்து வைத்திருக்கின்றார். இன்றைய நாளிலும் அவரது பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. யாராவது தனது கன்னிப் போட்டியில் விளையாடுவார்கள் எனில், அவர்கள் அதிக அழுத்தங்களுடன் காணப்படுவர். அவர் அந்த அழுத்தங்களை சமாளித்து, சதூர்யமான முறையில் பந்தினை வீசியதுடன் அவரது நுட்பங்கள் கலந்த  மூன்று வகையான பந்து வீச்சுப் பாணியினையும் வெளிக்காட்டியிருந்தார். “ என சந்தகன் இன்றைய போட்டியில் தனக்கு சகாவாக காணப்பட்ட பந்து வீச்சாளர் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இப்போட்டியின் புகைப்படங்கள்

சுழல் பந்து ஒன்றினை துடுப்பாட்ட வீரர் ஒருவர் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமாயின் பந்தானது சுழல் வீரரின் கையிலிருந்து வெளியேறிய பின்னர் அதனை சரியாகப் பெற்று அடிக்க வேண்டும். சுழல் பந்தானது தரையில் படும் எனில், துடுப்பாட்ட வீரரிற்கு பந்தினை எதிர்கொள்வது சற்று சிக்கலாக அமைந்து விடும். அந்த வகையில் எதிரணிக்கு சிக்கல் தரும் வகையிலான மூன்று வகையான சுழல் பந்து வீச்சு பாணி முறைகளினை சந்தகன் தன்னகத்தே கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விசேட வகை சைனமன் சுழல் பந்து வீச்சு மூலம், ஜிம்பாப்வே அணியினை நிலைகுலையச் செய்த சந்தகன், டி மசனோட் கல்லூரியின் முன்னாள் கால்பந்து வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ உண்மையை கூறப்போனால், எங்களது அணி வீரர்கள் சந்தகனின் பந்து வீச்சினை சரிவர எதிர்கொண்டிருக்கவில்லை. அவர் நாங்கள் இருந்த நிலைக்கு எங்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒருவராக காணப்பட்டிருந்தார். அதாவது அவர் எங்களுக்கு ஒரு புதிர் போன்று காணப்பட்டிருந்தார். எங்களது துடுப்பாட்ட வீரர்கள் சந்தகனிற்கு எதிராக ஓட்டங்கள் குவித்திருந்தும் அவர் சில பந்துகள் மூலம் இலகுவாக விக்கெட்டுக்களை போட்டியின் மத்திய வரிசையிலான ஓவர்களில் எடுத்திருந்தார். வரும் போட்டிகளில் அவரை கவனமாக அவதானித்து செயற்படுவது அவசியமாகின்றது. “ என சந்தகன் பற்றி ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரேம் கிறீமர் குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் பார்வையிட