கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கும் இலங்கை

1092

T20 உலகக் கிண்ண குழு 1 இல் காணப்படும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான சுபர் 12 சுற்று மோதல் நாளை (01) பிரிஸ்பேன் நகரில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

>> WATCH – நியூசிலாந்துடன் தோல்வி! ; இலங்கையால் அரையிறுதிக்கு செல்ல முடியுமா?

கவனிக்க வேண்டிய விடயங்கள்

இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு?

சுபர் 12 சுற்றில் இலங்கை அணி தாம் விளையாடிய இறுதி இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளிடம் படுதோல்வி அடைந்திருந்தது.  இந்த தோல்விகள் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் நிலையில் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை தக்க வைக்க தமக்கு எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற வேண்டியிருக்கின்றது. இலங்கை அணி இறுதி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போதும் குழு 1 இல் இருக்கும் ஏனைய அணிகளது போட்டி முடிவுகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே அரையிறுதிப் போட்டிகளில் இலங்கை அணிக்கு ஆட முடியும்.

மழையின் தாக்கம்

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது. எனினும் நாளைய போட்டி இடம்பெறவுள்ள பிரிஸ்பேன் அரங்கில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகின்றன. எனவே முழுமையான போட்டி ஒன்றை பார்க்க மழையின் குறுக்கீடு இல்லாமலும் நாளை இருக்க வேண்டும்.

>> தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் அஞ்சலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் களத்தடுப்பு

T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற முன்னர் தொடரில் இருக்கும் சிறந்த களத்தடுப்பு அணிகளில் ஒன்றாக இலங்கை அணி கருதப்பட்டிருந்தது. ஆனால் T20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. அத்துடன் இலங்கையின் களத்தடுப்பு தவறுகள் கடந்த இரண்டு போட்டிகளிலும் போட்டி முடிவுகளை தீர்மானிப்பவையாகவும் அமைந்திருந்தன. எனவே ஆப்கான் மோதலில் சிறந்த களத்தடுப்பினை வெளிப்படுத்தாத சந்தர்ப்பத்தில் இலங்கை அணி, வெற்றி வாய்ப்பை எதிரணிக்கு தாரைவார்க்க கூடிய சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணியினைப் பொறுத்தவரை இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்கள் கடந்த போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடரில் இலங்கைக்கு பலமாக இருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களும் இலங்கை அணிக்கு கடந்த போட்டியில் ஏமாற்றமான ஆட்டத்தை வழங்கினர். இலங்கை அணி இந்த தொடரில் பலவீனமாக அமைவதற்கு இலங்கை வீரர்களின் மத்திய வரிசை துடுப்பாட்டமும் காரணமாக அமைந்திருந்தது. எனவே இந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்படும் சந்தர்ப்பத்திலேயே இலங்கை வீரர்களால் நாளைய நாளில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்.

>> நியூசிலாந்துடன் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாட வேண்டிய இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக கைவிடப்பட்டிருக்கின்றன. அதேநேரம் சுபர் 12 சுற்றில் அவ்வணி இங்கிலாந்துடன் விளையாடி தோல்வியை சந்தித்தது. எனவே சுபர் 12 சுற்றில் முதல் வெற்றியை எதிர்பார்த்து அவ்வணி இலங்கையுடன் களமிறங்குகின்றது.

இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த சுழல் பந்துவீச்சை கொண்ட  அணிகளில் ஒன்றாகவும் இருக்கும் ஆப்கானிஸ்தான் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அவ்வணியின் வீரர்களான ரஷீட் கான், முஜிப் போன்றவர்கள் ஏற்கனவே அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் தொடரிலும் விளையாடிய அனுபவம் கொண்டிருப்பதால் இலங்கை அணிக்கு நாளைய மோதலில் அந்த வீரர்களும் பெரும் சவால் என்பதில் ஐயமில்லை.

>> அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது சரியான முடிவு – ஜோஸ் பட்லர்

அணி மாற்றங்கள்

இலங்கை அணியில் மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கசுன் ராஜித சிறப்பாக பிரகாசித்ததனை அடுத்து இலங்கை அணி நியூசிலாந்தை எதிர் கொண்ட அதே குழாத்தை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உபாதைக்குள்ளான ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சஷாய் இற்குப் பதிலாக குல்படின் நயீப் அணிக்குள் இணைக்கப்பட்டதனை அடுத்து, ஆப்கான் அணி நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இலங்கை எதிர்பார்ப்பு XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித

ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்பு XI –ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹீம் சத்ரான், குல்படின் நயீப், உஸ்மான் கனி, நஜீபுல்லா சத்ரான், மொஹமட் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீட் கான், முஜீப், பரீட் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<