இலங்கை அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில், முதலாவது போட்டியை வரலாற்று வெற்றியுடன் ஆரம்பித்த ஜிம்பாப்வே அணியை 19.5 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி போட்டித் தொடரை சமன் செய்தது இலங்கை அணி.

இந்தப் போட்டியில், ஜிம்பாப்வே அணி சார்பாக எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.  எனினும் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், மீண்டும் உடல் நலம் பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

19 வயதான சுழல்பந்து வீச்சாளர் வணிது ஹசரங்க, வேகப்பந்து வீச்சாளார் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் மதுஷங்கவுக்கு பதிலாக இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அத்துடன் ஐந்து வருடங்களுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்த அகில தனஞ்சய மற்றும் கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் பெரும் வெற்றிக்கு பங்காற்றிய அமில அபோன்சோ ஆகியோருக்கு இன்றைய தினம் ஓய்வளிக்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மற்றும் சுழல் பந்து வீச்சாளர் லக்‌ஷான் சந்தகன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் ஜிம்பாப்வே அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். முதலாவது போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், மிகுந்த நம்பிக்கையுடன் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

கடந்த போட்டியில் 112 ஓட்டங்களை விளாசி ஜிம்பாப்வே அணியை வெற்றி பாதைக்கு வழி நடத்திய சொலமன் மிர் போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய நுவன் பிரதீபின்  பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும், இரண்டாம் விக்கெட்டுக்காக ஹமில்டன் மஸகட்ஸாவுடன் இணைந்து கொண்ட கிரேக் எர்வின் ஆகியோர் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

இந்நிலையில், இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டதை முறிப்பதற்காக அணித தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் பகுதி நேர பந்து வீச்சாளரான அசேல குனரத்னவுக்கு பந்து வீசும் வாய்ப்பினை வழங்கினார். சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த ஹமில்டன் மஸகட்ஸா அசேல குணரத்னவின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஓய்வறை திரும்பினார்.

அதனை தொடர்ந்து, பந்து வீச்சில் மாற்றங்களை ஏற்படுத்திய அஞ்சலோ மெதிவ்ஸ் லக்‌ஷான் சந்தகனுக்கு பந்து வீசும் வாய்ப்பினை வழங்கினார். சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்ட லக்‌ஷான் சந்தகன் தனது சுழல்பந்து வீச்சின் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

கடந்த போட்டியைப் போன்றே ஸ்வீப் மூலம் ஓட்டங்களை குவிக்க முயன்ற ஜிம்பாப்வே அணிக்கு சந்தகனின் பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுக்க நேர்ந்தது. மல்கம் வலர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்த முயற்சித்த போதிலும் மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டதால் 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே ஜிம்பாப்வே அணிக்கு பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தது.

கடந்த போட்டியில் இலங்கை அணியால் மூன்று பிடியெடுப்புகள் நழுவ விடப்பட்டது போன்றே இந்த போட்டியிலும் மூன்று பிடியெடுப்புகள் நழுவவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. லசித் மலிங்க வீசிய முதலாவது ஓவரிலேயே இரண்டாம் ஸ்லிப்பில் (2nd Slip) களத் தடுப்பிலிருந்த குசல் மென்டிஸ் பிடியெடுப்பை தவற விட்டிருந்தார்.

எனினும், இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசிய அறிமுக வீரர் வணிது ஹசரங்க மற்றும் லக்‌ஷான் சந்தகன் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்தியிருந்தனர்.

லக்‌ஷான் சந்தகன் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அதேநேரம் இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்ட வணிது ஹசரங்க 15 ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை பதிவு செய்தார்.

அதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே வீழ்த்தி இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே அணி அதிர்ச்சி அளித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க, தென்டாய் சட்டாராவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த போட்டியில் வேகமாக 1000 ஓட்டங்களை பெற்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டாவது இடத்தை உபுல் தரங்கவுடன் பகிர்ந்து கொண்ட குசல் மென்டிஸ் இந்த போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமாலே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

எனினும், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுடன் இணைந்து கொண்ட உபுல் தரங்க மூன்றாவது விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு அணியின் ஓட்டங்களை உயர்த்தி அணியை வலுவான நிலைக்கு வழி நடத்தினார்.

போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமரின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் நிரோஷன் திக்வெல்ல. அதனையடுத்து உபுல் தரங்கவுடன் இணைந்து கொண்ட அஞ்சலோ மெதிவ்ஸ், இருவரும் ஆட்டமிழக்காமல் 19.5 ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

உபுல் தரங்க 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 75 ஓட்டங்களையும், அஞ்சலோ மெதிவ்ஸ் 28 ஓட்டங்களையும் பதிவு செய்தனர். பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக தென்டாய் சட்டாரா 33 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடர் 1-1 என்று சமநிலை பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இன்றைய போட்டிக்கு களமிறக்கப்பட்ட லக்ஷான் சந்தகன் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது

போட்டியின் சுருக்கம்

[table id=100 /]

[table id=101 /]

[table id=103 /]

[table id=102 /]