பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நேற்று (04) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் அருண தர்ஷன, 44.99 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 3ஆம் இடத்தைப் பெற்று அரையிறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையை அருண தர்ஷன படைத்தார்.
அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டு விழா வராலாற்றில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களுக்கான 400 மீற்றர் இரண்டாவது தகுதி பெற்ற முதல் இலங்கையராக அவர் இடம்பிடித்தார். முன்னதாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில், சுகத் திலகரட்ன ஆண்களுக்கான 400 மீற்றர் ஆரம்ப சுற்றை 45.54 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 9ஆவது நாளான நேற்று (04) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் 5ஆவது தகுதிகாண் சுற்றில் இலங்கை வீரர் அருண தர்ஷன களமிறங்கினார். குறித்த போட்டியில் மிகவும் கடினமான 9ஆவது சுவட்டில் ஓடிய அவர், அப் போட்டியை 44.99 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்று அரையிறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரரான சுகத் திலகரட்ன 1998ஆம் ஆண்டு ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 44.66 செக்கன்களில் நிறைவு செய்ததே இலங்கை வீரர் ஒருவர் குறித்த போட்டியில் பதிவு செய்த சிறந்த நேரப் பெறுமதியாக இடம்பிடித்தது. அதன்பின்னர், குறித்த போட்டியை 45 செக்கன்களில் ஓடிய இரண்டாவது வீரராக அருண தர்ஷன இடம்பிடித்தார். அதுமாத்திரமின்றி, இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
அத்துடன், 6 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற இத்தகுதிகாண் சுற்றில் மொத்தம் 46 வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், அரையிறுதிக்கு தகுதிபெற்ற 18 வீரர்களில் 17ஆவது இடத்தை அருண தர்ஷன பெற்றுக்கொண்டார்.
இதனிடையே, அருண தர்ஷன பங்குபற்றிய போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (44.78 செக்.) முதலாம் இடத்தையும் கனடா வீரர் கிறிஸ்டோபர் மொரேல்ஸ் வில்லியம்ஸ் (44.96 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இந்த நிலையில், உலகின் பிரபல 24 வீரர்கள் பங்குபற்றுகின்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டிகள் நாளை (06) இரவு 11.05 மணிக்கு (இலங்கை நேரப்படி) நடைபெறவுள்ளது.
இதேவேளை, பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக இதுவரை பங்குபற்றிய கங்கா செனவிரட்ன (நீச்சல்), கய்ல் அபேசிங்க (நீச்சல்), விரேன் நெத்தசிங்க (பாட்மின்டன்) மற்றும் தருஷி கருணாரட்ன (மெய்வல்லுனர்) ஆகிய நான்கு வீரர்களும் முதல் சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<