மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை வெளியீடு

251

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் அட்டவணை ஐ.சி.சி. இனால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது.

வழமையாக ஆண்களுக்கான உலக T20 சம்பியன்ஷிப் தொடருடன் நடைபெறும் மகளிர் உலக T20 சம்பியன் தொடர் இம்முறை தனியான ஒரு தொடராக நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

தடுமாறும் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்களா ரொஷேன், திக்வெல்ல?

ஐ.சி.சி. இன் மாபெரும் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான இந்த மகளிர்  T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை 10 அணிகள் பங்கெடுக்கின்றன. அந்தவகையில், மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் அணிகளாக அவுஸ்திரேலியா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணி, தென்னாபிரிக்க மகளிர் அணி, இலங்கை மகளிர் அணி, மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி ஆகியவையும் தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவாகும் மேலதிகமான இரண்டு நாடுகளின் மகளிர் அணிகளும் அமைகின்றன. மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் யாவும் மேற்கிந்திய தீவுகளிலுள்ள மூன்று மைதானங்களில் (கயானா, சென். லூசியா, அன்டிகுவா) நடைபெறவிருக்கின்றது.

இதேவேளை, ஐ.சி.சி. மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் மேலதிக இரண்டு அணிகளையும் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் யாவும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெறவிருக்கின்றன. இந்த தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகள் இரண்டும் மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் அணிகளாக மாறும். தகுதிகாண் போட்டிகளில் பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, பபுவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவற்றின் மகளிர் அணிகள் பங்கெடுக்கின்றன.

ஐ.சி.சி. மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, போட்டிகள் அனைத்தும் உலகெங்கும் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. மகளிர் கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவது போட்டிகள் அனைத்தையும் ஒளிபரப்புச் செய்வதன் நோக்கமாகும். அத்துடன், இம்முறைக்கான தொடரில் தொழில் நுட்ப உதவி மூலம் ஆட்டமிழப்பு முடிவுகளை மீள் பரிசீலனை செய்யும்  DRS முறைமையும் பயன்படுத்தப்படவுள்ளது. மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடர் ஒன்றில் DRS முறைமை பயன்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த ஆண்டுக்கான மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் குழு A இல் மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும், தென்னாபிரிக்க மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும், தகுதிகாண் போட்டிகளில் முதலிடத்தை பெறும் (Qualifier 1) நாட்டின் மகளிர் அணியும் காணப்படுகின்றது.

இதேவேளை குழு B இல் பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதிகாண் போட்டிகளில் இரண்டாம் இடத்தை (Qualifier 2) பெறும் நாடு போன்வற்றின் மகளிர் அணிகள் காணப்படுகின்றன.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் ஜெப்ரி வன்டர்செய்

குழு நிலைப் போட்டிகளின் பின்னர் ஒவ்வொரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அன்டிகுவாவில் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறும் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் மோதும். அரையிறுதிப் போட்டிகளில் இருந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் இரண்டு அணிகளும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இதே மைதானத்தில் மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கிண்ணத்துக்காக பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கயானாவில் இடம்பெறவுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், முதல் நாளில் இடம்பெறும் ஏனைய போட்டிகளில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றின் மகளிர் அணிகளும் மோதல்களில் பங்கெடுக்கின்றன.

இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரில் குழு நிலைப் போட்டிகளோடு வெளியேறிய இலங்கை மகளிர் அணி இம்முறைக்கான தொடரில் நல்ல முடிவுகளை எதிர்பார்த்த வண்ணம் வலம் வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான மகளிர் உலக T20 சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை மகளிர் அணி நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் தமது முதல் போட்டியில் பலம் மிக்க இங்கிலாந்து மகளிர் அணியை சென். லூசியாவில் எதிர்கொள்கின்றது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி நவம்பர் மாதம் 12 ஆம் திகதி தென்னாபிரிக்க மகளிர் அணியுடனும், நவம்பர் மாதம் 14 ஆம் திகதி தகுதிகாண் போட்டிகளில் முதலிடத்தைப் பெறும் நாட்டின் மகளிர் அணியுடனும், நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடரை நடாத்தும் மேற்கிந்திய தீவுகளுடனும் மோதி தமது குழுநிலைப் போட்டிகளை முடித்துக் கொள்கின்றது.

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதில் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அட்டபத்து பேசுகையில், “எங்களது முக்கியத்துவம் இனி உலக T20 சம்பியன்ஷிப் போட்டிகளிலேயே இருக்கும். ஐ.சி.சி. இன் முக்கிய தொடர்களில் இதுவும் ஒன்று என்பதால் அனைத்து அணிகளும் இதில் சிறப்பாகவே செயற்பட விரும்பும். எல்லோரும் T20 போட்டிகளில் உள்ள சவால்களை விளங்கியிருக்கின்றனர். எனவே, சவாலான இந்த தொடரை எந்தவொரு அணியும்  எந்த நிலையிலும் இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பாது. நாங்களும் விளையாட்டின் அனைத்து துறைகளிலும் (இந்த தொடரில்) நல்ல முறையில் செயற்பட்டு அனைவராலும் பேசப்படும் ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்“ என்றார்.

போட்டிகள் அட்டவணை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<