DCL சம்பியன் கொழும்பு அணியை வீழ்த்திய சோண்டர்ஸ் எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில்

627

சுகததாஸ அரங்கை அலங்கரித்த வான்டேஜ் எப்.ஏ கிண்ணத்தின் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான அரையிறுதி மோதலில், சோண்டர்ஸ் வீரர்கள் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட கோல்களின் மூலம் 2-0 என வெற்றி பெற்று, தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கையில் அதிக தடவைகள் எப்.ஏ கிண்ணத்தை வென்றுள்ள சோண்டர்ஸ் வீரர்கள், இம்முறை தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கை இராணுவப்படை அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

பொலிஸை வீழ்த்திய நடப்புச் சம்பியன் இராணுவ அணி எப்.ஏ கிண்ண இறுதி மோதலில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி…..

கடந்த வாரம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் வீரர்கள் சிறைச்சாலை விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டிருந்தனர். அதேபோன்று, கொழும்பு கால்பந்துக் கழகத்தினர் நியு யங்ஸ் அணியினரை பெனால்டியில் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.

கொழும்பு முதல் பதினொருவர்

ரௌமி மொஹிடீன் (தலைவர்), கவீஷ் பெர்னாண்டோ (கோல் காப்பாளர்), ஷலன சமீர, நிரான் கனிஷ்க, ஷரித்த ரத்னாயக்க, அஹமட் சஸ்னி, மொஹமட் பசால், சர்வான் ஜோஹர், மொஹமட் ஆகிப், மொஹமட் ரிப்னாஸ், டிலான் கௌஷல்ய

சோண்டர்ஸ் முதல் பதினொருவர்

ஷானுக எரங்க, இந்ரஜீவ உதார, சனோஜ் சமீர, கிறிஷாந்த அபேசேகர, அசங்க விராஜ் (கோல் காப்பாளர்), பிரியதர்ஷன, ஷமோத் டில்ஷான், கசுன் ஜயசூரிய, ரங்கன, சுந்தரராஜ் நிரேஷ், மொஹமட் நளீம்

போட்டியின் முதல் முயற்சியாக 14ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற டிலான் கௌஷல்ய, கோலுக்கு நேர் எதிரே வந்து உதைந்த பந்து சோண்டர்ஸ் கோல் காப்பாளர் அசங்க விராஜின் கைகளுக்கே சென்றது.

அடுத்த நிமிடம் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை எதிரணியின் கோல் எல்லையில் இருந்து பெற்ற கசுன் ஜயசூரிய, அதனை கோல் நோக்கி உதைந்தார். பந்து கோல் காப்பாளர் கவீஷின் தடுப்பில் பட்டு இடது பக்க கம்பத்திற்கு அருகினால் வெளியே சென்றது.

20 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் அணியின் மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மொஹமட் ரிப்னாஸ் பெற்றார். அவர் மிக வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் இடது பக்க கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.

சில நிமிடங்களில் கிறிஷாந்த அபேசேகர மத்திய களத்தில் இருந்து உயர்த்தி உதைந்த பந்து கொழும்பு கால்பந்து கழகத்தின் கோலின் வலது பக்க கம்பத்தை அண்மித்து வெளியே சென்றது.

சிறைச்சாலை அணியை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறிய சௌண்டர்ஸ்

FA கிண்ணத்தில் பலம் கொண்ட் சௌண்டர்ஸ் அணிக்கு சிறைச்சாலை விளையாட்டுக் கழகம் …..

35ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணியின் பகுதியில் இடதுபுற கோல் எல்லையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த சர்வான் ஜோஹர் நெஞ்சால் தடுத்து கோலுக்கு உதைகையில் பந்து கம்பத்தைவிட உயர்ந்து சென்றது.

மீண்டும் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற அஹமட் சஸ்னி கோல் நோக்கி உதைந்த பந்தை அசங்க விராஜ் பிடித்தார்.

முதல் பாதியின் இறுதித் தருவாயில் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கசுன் ஜயசூரிய, ஹெடர் செய்ய பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.

தொடர்ந்து கொழும்பு அணியின் எல்லையில் ஆக்கிரமித்த சோண்டர்ஸ் வீரர்கள் கோலுக்கு வேகமாக உதைந்த பந்தை கவீஷ் பிடித்துக்கொண்டார்.

முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 0 – 0 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்த பின்னர், முதல் முயற்சியாக கொழும்பு அணியின் மத்திய களத்தில் இடது பக்க எல்லையில் இருந்து சமோத் டில்ஷான் உள்ளனுப்பிய பந்தை கசுன் ஜயசூரிய கோல் நோக்கி ஹெடர் செய்ய, பந்தை கவீஷ் பிடித்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் மத்திய களத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை உதார பெற்றார். அவர் உதைந்த பந்து கொழும்பு வீரர்களின் கோலின் வலது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியேறியது.

>>புகைப்படங்களைப் பார்வையிட<<

சில நிமிடங்களில் மைதானத்தின் மத்தியில் இருந்து செலுத்திய பந்தை கொழும்பு பின்கள வீரர் தடுக்க தவறியமையினால் பந்து கசுன் ஜயசூரியவிடம் சென்றது. அவர் கோலுக்கு அண்மைவரை பந்தை எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்யாமல் தனியே கோலுக்கு எடுத்த முயற்சியின்போது பந்து வெளியே சென்றது.

60ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் எல்லையின் வலது புறத்தில் இருந்து நிரேஷ் உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து உதார கோலை நோக்கி செலுத்த, வேகமாக சென்ற பந்தை கவீஷ் பாய்ந்து வெளியே தட்டினார்.

பின்னர், கொழும்பு அணி வீரர்கள் மேற்கொண்ட வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோலுக்கு நீண்ட தூரத்தில் இருந்து ஷரித்த உதைந்த பந்தை அசங்க பாய்ந்து பிடித்தார்.

போட்டி 70 நிமிடங்களை கடந்த நிலையில், கசுன் ஜயசூரிய கொழும்பு அணியின் பெனால்டி எல்லையில் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். எனவே, சோண்டர்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நிரேஷ் வலது புறத்தினால் வலைக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

முதல் கோல் பெறப்பட்டு சில நிமிடங்களில் கொழும்பு அணியினருக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை ஆகிப் கோலுக்குள் உதைய பந்து வெளியே சென்றது.

பெனால்டியில் நியு யங்ஸை வீழ்த்திய கொழும்பு வீரர்கள் அரையிறுதியில்

நியு யங்ஸ் அணிக்கு எதிரான வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரில் நியு யங்ஸ்….

இரண்டாம் பாதியின் இறுதி நிமிடங்களில் சோண்டர்ஸ் தரப்பில் தமது அதிகமான வீரர்களை வைத்து விளையாடிய கொழும்பு அணி வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான வாய்ப்புக்களைப் பெற்றனர். எனினும், அவர்களது இறுதி முயற்சிகள் அனைத்தையும் கோல் காப்பாளர் அசங்க வீராஜும், ஏனைய பின்கள வீரர்களும் தடுத்தனர்.

போட்டியின் உபாதையீடு நேரம் வழங்கப்பட்ட நிலையில் எதிரணியின் தரப்பில் தனித்திருந்த கசுன் ஜயசூரியவிடம் வந்த பந்தை, அவர் எந்தவித பதட்டமும் இன்றி எதிரணியின் இரண்டு பின்கள வீரர்களை விடவும் வேகமாக பந்தை எடுத்துச் சென்று, அதனை கோலுக்குள் செலுத்தி இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

எனவே, போட்டி நிறைவில் 2-0 என டயலொக் சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய சோண்டர்ஸ் வீரர்கள், ஏற்கனவே முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இராணுவப்படை அணியுடன் இறுதிப் போட்டியில் கிண்ணத்திற்காக மோதவுள்ளனர்.

முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 0 – 2 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சோண்டர்ஸ் வி.க – சுந்தராஜ் நிரேஷ் 71′ (பெனால்டி) , கசுன் ஜயசூரிய 90+3′

 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

கொழும்பு கா.க – ஷலன சமீர

சோண்டர்ஸ் வி.க – கசுன் ஜயசூரிய

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<