உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அருண, அமாஷா அரையிறுதிக்கு தகுதி

242

பின்லாந்தின் தம்பரே நகரில் நடைபெற்றுவரும் 17ஆவது உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரின் (20 வயதுக்கு உட்பட்ட) இரண்டாவது நாளான இன்றைய தினம் (11) ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன தகுதிச் சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

அத்துடன், பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தெற்காசியவின் அதிவேக வீராங்கனையான அமாஷா டி சில்வா நான்காவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

>> IAAF உலக சம்பியன்ஷிப் போட்டியில் பாரமி தேசிய சாதனை

இலங்கை உள்ளிட்ட 158 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குபற்றும் 17ஆவது உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை பின்லாந்தின் தம்பரே நகரில் ஆரம்பாகியது. இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து ஐந்து வீரர்கள், ஆறு வீராங்கனைகள் உள்ளடங்கலாக 11 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனும், இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவருமான இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன, இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.50 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் மூன்றாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டார்.

உலகின் பல முக்கிய நட்சத்திர வீரர்கள் கலந்துகொண்ட குறித்த போட்டியில் எட்டாவது சுவட்டில் ஓடிய அருண தர்ஷன, 46.81 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால், கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்ட (45.79 செக்.) நேரப் பெறுமதியை அவரால் முறியடிக்க முடியாமல் போனது.

இதன்படி, நாளை (12) நண்பகல் நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.

எனினும், ஏழு சுற்றுக்களைக் கொண்ட இந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷனவின் நேரப் பெறுமதியானது ஒட்டுமொத்த வீரர்களின் அடிப்படையில் 6ஆவது இடத்தைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டிப் பிரிவில் பார்படோஸின் ஜொனதன் ஜோன்ஸ் (46.05 செக்.), ஜமைக்காவின் கிறிஸ்டோபர் டெய்லர் (46.14 செக்.), இத்தாலியின் எட்டார்டோ ஸ்கொட்டி (46.52 செக்.) ஆகிய மூவரும் சிறந்த நேரப் பெறுமதிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள மாத்தளை, அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரியில் கல்வி பயிலுகின்ற அருண தர்ஷன, இந்த வெற்றியின் மூலம் இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், குறித்த தகுதிச் சுற்றில் அவருடன் போட்டியிட்ட பிரேசில் வீரர் புரூனோ சில்வா (46.81 செக்.) இரண்டாவது இடத்தையும், இத்தாலியின் குளோடியோ ஙிடெச்ட்சா (47.09 செக்.) தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியுடன் மூன்றாவது இடத்தையும் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கமொன்றை பெற்றுக்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் கலந்துகொண்ட அமாஷா டி சில்வா, தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை 11.75 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இவர் கடந்த ஜுன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இதே போட்டிப் பிரிவில் அதிசிறந்த நேரப் பெறுமதியுடன் (11.71 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், 37 வீராங்கனைகள் கலந்துகொண்ட தகுதிச்சுற்றில் அமாஷாவுக்கு 19ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்ததுடன், நாளை (12) நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் 100 மீற்றரில் முன்னிலை உள்ள வீராங்கனைகளுடன் போட்டியிடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

1994ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுத்த அமாஷா டி சில்வா, கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 100, 200 மற்றும் 4 x 100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமாஷாவுடன் இப்போட்டியில் பங்குபற்றிய இங்கிலாந்து வீராங்கனை கிறிஸ்டல் அவுவாஹ் (11.35 செக்.) மற்றும் அயர்லாந்து வீராங்கனை சியரா நெவில்லே (11.54 செக்.) ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

>> பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

இதேவேளை, உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது நாளான நாளைய தினம் (12) நடைபெறவுள்ள ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் அருண தர்ஷன கலந்துகொள்ளவுள்ளார்.

3ஆவது அரையிறுதிப் போட்டியில் 6ஆவது சுவட்டில் போட்டியிடவுள்ள அருண தர்ஷனவுடன், தகுதிச் சுற்றில் சிறந்த காலங்களைப் பதிவுசெய்த ஜமைக்காவின் கிறிஸ்டோபர் டெய்லர் (46.14 செக்.) மற்றும் அமெரிக்காவின் ஹோவார்ட் பீல்ட்ஸ் (45.50 செக்.) ஆகிய வீரர்கள் போட்டியிடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோன்று, நாளை நடைபெறவுள்ள பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலாவது அரையிறுதியில் அமாஷா டி சில்வா போட்டியிடவுள்ளார்.

மேலும், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று (10) நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றல் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கையின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா தம்வசமிருந்த தேசிய கனிஷட சாதனையை முறியடித்து ஐந்தாவது இடத்தையும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் டில்ஷி குமாரசிங்க ஏழாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். குறித்த வீராங்கனைகள் இருவருக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<