ஆஸி. தொடருக்கான இந்திய குழாமில் 4 தமிழ்நாட்டு வீரர்கள்

303
 

இந்திய கிரிக்கெட் அணியானது நவம்பர் மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது மூன்று தொடர்களுக்குமான குழாமை வெவ்வேறாக சற்று முன்னர் (26) வெளியிட்டுள்ளது.  

குறித்த அவுஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக 4 வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக அவுஸ்திரேலியா பயணிக்கவுள்ளனர். ஐ.பி.எல் தொடரில் விளையாடிய கமலேஷ் நாகர்கொடி (கொல்கத்தா), கார்த்திக் தியாகி (ராஜஸ்தான்), இஷான் பொரெல் (பஞ்சாப்), டி. நடராஜன் (ஹைதராபாத்) ஆகியோர் இவ்வாறு வலைப் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

டுபாய் வந்தடைந்த புஜாரா, விஹாரி: வெளியாகிய காரணம்

அதன்படி அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில், ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் டி. நடராஜன் (வலைப் பந்துவீச்சாளர்) ஆகிய 4 தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

டெஸ்ட் தொடருக்கான குழாம்  

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றதன் அடிப்படையில் வீரர்கள் உபாதைக்குள்ளாதல் மற்றும் வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்வதன் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்காக 18 பேர் அடங்கிய குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகளாக நடைபெறவுள்ள குறித்த டெஸ்ட் தொடரானது சிறப்புமிக்க போர்டர் – கவஸ்கர் தொடராக அமைந்துள்ளமை விசேடமாக குறிப்பிடத்தக்கது. விராட் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் மீண்டும் இந்திய டெஸ்ட் குழாமுக்கு திரும்பியுள்ளார்.

IPL ப்ளே-ஓப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை வெளியீடு

தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹிட் சர்மா உபாதைக்குள்ளானதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியுடனான முழுமையான தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அதேபோன்று ஐ.பி.எல் தொடரின் போது உபாதைக்குள்ளாகி தொடரிலிருந்து முழுமையாக வெளியேறிய வேகப் கபந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் முழுமையான குழாமில் இடம்பெறவில்லை. இருந்தாலும் இவர்கள் இவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஜனவரியில் அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காத சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு திரும்பியுள்ளார். இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்று 3 T20i, ஒரேயொரு ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷிராஜ் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் குழாம் 

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல் ராகுல், சடீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விரித்திமன் சாஹா, ரிஷப் பண்ட், ஜெஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, உமேஸ் யாதவ், நவ்தீப் ஷைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் சிராஜ் 

IPL அரைச்சதம், சிக்ஸர்களில் கோஹ்லி புதிய சாதனை

T20i தொடருக்கான குழாம்  

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் வழமையான உபதலைவர் ரோஹிட் சர்மா உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான அணியின் உபதலைவராக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிவரும் தமிழ்நாட்டு வீரர் வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் வீரராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிரகாசித்துவரும் ஷிகர் தவான், மயங்க் அகர்வால், சஞ்சு சம்சன், ஹர்திக் பாண்டியா, தீபக் சஹார் ஆகியோர் T20i குழாமில் இடம்பெற்றுள்ள அதேவேளை, சிவம் துபே, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இறுதியாக மோதிய நியூசிலாந்து அணிக்கெதிரான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய T20 குழாம்  

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ஷிரேயஸ் ஐயர், மணீஸ் பாண்டி, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சம்சன், ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், ஜெஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் ஷைனி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி

சர்வதேச போட்டிகளை மீள ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

ஒருநாள் சர்வதேச தொடருக்கான குழாம் 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் உபாதைக்குள்ளாகி தொடரிலிருந்து முழுமையாக வெளியேறிய வேகப் பந்துவீச்சாளர் புவ்னேஸ்வர் குமார் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய குழாமில் இடம்பெறும்  வாய்ப்பை இழந்துள்ளார்.

இறுதியாக ஒருநாள் குழாமில் இடம்பெறாத வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி மீண்டும் ஒருநாள் குழாமுக்கு திரும்பியுள்ளார். மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் சர்துல் தாகூரும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய ஒருநாள் சர்வதேச குழாம் 

விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ஷிகர் தவான், சுப்மன் கில், மயங்க் அகர்வால், ஷிரேயஸ் ஐயர், மணீஸ் பாண்டி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜெஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் ஷைனி, சர்துல் தாகூர் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<