இலங்கை அணியின் தயார்படுத்தல்கள் குறித்து மிக்கி ஆத்தர்

1144
MICKEY ARTHUR

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தென்னாபிரிக்க அணியினை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இலங்கை வீரர்கள் எதிர்கொள்வது பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.   

>> LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான தனன்ஜய லக்ஷான் 

கொவிட்-19 வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணி எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. அதன்படி, நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடர் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி கொவிட்-19 தொற்றுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்ற வாய்ப்பினைப் பெற்ற சமீபத்திய அணியாக மாறிக் கொள்கின்றது. (பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டுமே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குப் பின்னர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடாத டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற அணிகளாக காணப்படுகின்றன.)  

இலங்கை கிரிக்கெட் அணி கடைசியாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாம் விளையாடியிருந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வீரர்களை 1-0 எனத் தோற்கடித்த போதும், கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணி வீரர்களுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடர் இலங்கை அணிக்கு மறக்க முடியாத டெஸ்ட் தொடர்களில் ஒன்றாக அமைந்திருந்தது. அந்த தொடரில், திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க வீரர்களை 2-0 என வீழ்த்தி தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகவும் சாதனை படைத்திருந்தது. 

இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணுக்குச் செல்வதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வியுற்றிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்க வேண்டிய விடயமாகும். 

அதேநேரம், இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறப்போகும் செஞ்சுரியன் மற்றும் ஜொஹன்னஸ்பேர்க் ஆகிய இரண்டு மைதானங்களும் வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் சாதகம் கொண்ட இடங்களாகவும் காணப்படுகின்றன. 

Embed – “தென்னாபிரிக்க அணியை வீழ்த்துவது இலகுவான விடயமல்ல” – Dimuth Karunaratne 

தென்னாபிரிக்க அணியுடனான தொடருக்கு முன்னர் கடைசியாக இலங்கை அணியின் வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடியிருந்தனர். லங்கா ப்ரீமியர் லீக் தொடர் T20 போட்டிகளாக நடைபெற்று நிறைவுக்கு வந்ததனை அடுத்து இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான ஒரு மனநிலையினை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

”இது சாதாரணமான ஒரு தயார்படுத்தல் கிடையாது. நாங்கள் இன்று மைதானத்திலும், பயிற்சி வலைகளிலும் தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தோம். இது பயிற்சிக்கான ஒரு சாதாரண நாள் என்ற போதும் நாங்கள் ஏழு குழுக்களாக தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனாலும், நான் அந்த குழுக்களை சமமாகப் பிரித்திருக்கின்றேன். நாங்கள் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலேயே முழு அணியாக தயார்படுத்தல்களில் ஈடுபடுவோம். இந்த தயார்படுத்தல் வாய்ப்புக்களை எங்களால் முடிந்த அளவிற்கு உபயோகம் செய்து கொள்வோம். லங்கா ப்ரீமியர் லீக் ஆரம்பமாக இரண்டு வாரங்களின் முன்னர் தயார்படுத்தல்களுக்காக நாங்கள் பல்லேகல மைதானத்திற்கு சென்றிருந்தோம். லங்கா ப்ரீமியர் லீக் தொடர் வீரர்களுக்கு போட்டித்தன்மையான கிரிக்கெட் ஆடுகின்ற சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அது நல்ல விடயம்“ என மிக்கி ஆத்தர் குறிப்பிட்டிருந்தார்.  

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் (CSA) உருவாக்கப்பட்டிருந்த உயிரியல் பாதுகாப்பு பிரதேசம் தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் போது குழம்பியதனால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதனால், தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரும் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா செல்ல ஒரு வாரம் முன்பே வைத்தியர் தமிந்த அத்தநாயக்கவுடன் தென்னாபிரிக்க மண்ணுக்கு விஜயம் செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் சுகாதார விடயங்கள் தொடர்பில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். 

>> இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் ஜெக் கல்லிஸ்!

”இங்கே உயிரியல் பாதுகாப்பு வலயம் (Bio Bubble) நன்றாக உள்ளது. இது நீங்கள் இதுவரை இருந்த உயிரியல் வலயத்தில் சிறப்பானது. நானும் வைத்தியரும் தேவையான ஆயத்தங்கள் இங்கே மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்ய வந்திருந்தோம். நாங்கள் இப்போது திருப்தியான முறையில் காணப்படுவதோடு இங்கே ஆயத்தங்களும் நன்றாக இருக்கின்றன. அதாவது நாம் புதிய சாதாரண (New Normal) வாழ்க்கை முறைமையில் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகின்றோம். எங்களை பாதுகாக்கும் உத்தியோகத்தர்கள் அதிகமாக இருக்கின்றனர். நாங்கள் ஒவ்வொரு மூன்று நாளுக்கும் ஒரு முறை கொவிட்-19 தொற்று பரிசோதனைகளுக்கு முகம்கொடுக்கின்றோம். இது வித்தியாசமாக இருக்கின்றது. கிரிக்கெட் சுற்றுப்பயணங்களும் வித்தியாசமானது என்ற போதும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருக்கும் வசதிகள் திருப்தி தருகின்றன” என்றார். 

தென்னாபிரிக்க தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்துறையினை இரு வீரர்களின் உபாதைகள் பாதித்திருந்தன. அந்தவகையில் உபாதைகளுக்கு முகம்கொடுத்த வீரர்களாக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஒசத பெர்னாந்து ஆகியோர் மாறியிருந்தனர். இதில், அஞ்செலோ மெதிவ்ஸ் தென்னாபிரிக்க மண்ணுக்கு பயணமாகாத நிலையில், ஒசத பெர்னாந்து பயணமாகியும் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இந்த வீரர்கள் இல்லாத நிலையில், குசல் ஜனித் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பவீரராக திமுத் கருணாரத்னவுடன் களமிறங்க, லஹிரு திரிமான்ன இலங்கை அணிக்கு மத்தியவரிசைத் துடுப்பாட்டவீரராக பலம்சேர்ப்பார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டு தென்னாபிரிக்க வீரர்களை அவர்களது மண்ணில் வைத்து முதல்தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வீழ்த்த குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது பெற்ற 153 ஓட்டங்கள் பெரும் உதவியாக அமைந்திருந்தது. இது ஒரு பக்கமிருக்க அறிமுக சகலதுறைவீரர் சந்துஷ் குணத்திலக்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரும் இலங்கை டெஸ்ட் அணியின் மத்தியவரிசைக்கு பலம் சேர்க்க எதிர்பார்க்கப்படும் ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர்.

>> Video – வியாஸ்காந்தின் திறமைக்கு உத்தரவாதம் கொடுத்த Wanindu Hasaranga..!

”கடைசியாக நாம் விளையாடிய டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பங்குபற்றிய வீரர்களை நோக்கினால், ஒசத பெர்னாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார். ஆம், நாம் அஞ்செலோ மெதிவ்ஸினையும் இழந்திருக்கின்றோம். நான் எனது மனதில் (முதல் டெஸ்ட் போட்டியில் ஆடப்போகும்) முதல் ஆறு பேரினை வைத்திருக்கின்றேன். நாம் கொஞ்சம் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த எதிர்பார்த்தால் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு விக்கெட்காப்பாளர் என ஒரு தேர்வு உண்டு. மற்றைய தேர்வு என்னவெனில், ஆறு துடுப்பாட்டவீரர்களை பயன்படுத்தி வேகப் பந்துவீச்சாளர் ஒருவரினை உபயோகம் செய்வதாகும். இதன்போது, 7ஆம் இடத்தில் விக்கெட் காப்பாளரினையும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும், ஒரு சுழல் பந்துவீச்சாளரினையும் பயன்படுத்த முடியும். எங்களுக்குத் தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், சரியான தீர்மானம் இன்னும் இல்லை.  நாம் அந்த தீர்மானத்தினை இன்னும் ஓரிருநாட்களில் மேற்கொள்வோம்.” 

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் நிறைவடைந்த பின் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து வீரர்களுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை மண்ணில் ஆடவிருக்கின்றது. எனவே, இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த டெஸ்ட் தொடருக்காக தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் போது இலங்கை வீரர்கள் ஒரு சிறந்த மனநிலையினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றனர். 

”அனைத்து தொடர்களும் எமக்கு முக்கியமானவை. நாம் இந்த அணியுடன் ஒரு தொழிற்பாட்டில் இருக்கின்றோம். நாங்கள் இதனை சிறந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதேநேரம், வீரர்களின் தெரிவுகளிலும் சிறப்பாக செயற்பட வேண்டியிருக்கின்றோம். ஆனால், ஒரு விடயம் எனக்குத் தெரியும் நீங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவீர்கள் எனில், எந்த கஷ்டமான சந்தர்ப்பத்திலும் விளையாடுவதற்கு நம்பிக்கையினைப் பெற்றுக்கொள்வீர்கள். குறித்த நம்பிக்கை விளையாடும் போது மிகவும் அத்தியாவசிமானது. எனவே, நாம் அந்த நம்பிக்கையினை இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு கொண்டு போகும் போது அது எமக்கு மிக்க உதவியாக இருக்கும். எனினும், நமக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரும் மிக முக்கியமானது. கடைசியாக இலங்கை அணி இங்கே விளையாடிய போது அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். அதோடு, அந்த தொடரில் இலங்கை அணி தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றினை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாகவும் மாறியது. நாம் அதேமாதிரியான விடயம் ஒன்றினை மீண்டும் செய்ய விரும்புகின்றோம்.” 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<