கைது செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் இருந்து நீக்கம்

105

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் உப தலைவருமான 26 வயதான பென் ஸ்டோக்ஸ், இரவு நேர கேளிக்கை விடுதியில் தகராறில் ஈடுபட்டமை தொடர்பாக சமர்செட் மற்றும் எவோன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த சம்பவத்தினால் அவர் இன்று இடம்பெறும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஒருநாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்டில் மெதிவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

ஐக்கிய அரபு இராட்சியத்தின் அபு தாபி நகரில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான்…

பென் ஸ்டோக்ஸ், கடந்த திங்கட்கிழமை அதிகாலை பிரிஸ்டலில் உள்ள பகுதியில் நபரொருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை அந்நாட்டு பொலிஸார் அழைத்துச் சென்று இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர். எனினும் அதன்பின்னர் எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவரை விடுவிக்கவும் அந்நாட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பிரிஸ்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 73 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில், வெற்றியை கொண்டாடுவதற்காக ஸ்டோக்ஸ், சக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் அங்குள்ள எம்பார்கோ இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும், மற்றொரு வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாகி உள்ளது. இதில் ஸ்டோக்ஸுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டதுடன், 27 வயதான குறித்த நபரின் முகத்தில் காயமடைந்துள்ளது. எனவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பென் ஸ்டோக்ஸ்சை கைது செய்துள்ளனர். பிறகு காலையில் அவரை விடுவித்தனர். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், அவருடன் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதால் இருவரையும் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் கைது தொடர்பில் சமர்செட் மற்றும் எவோன் பொலிஸ் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”திங்கட்கிழமை அதிகாலை 2.35 அளவில் க்ளிப்டனின் குவீன்ஸ் வீதியில் இடம்பெற்ற தகராறில் 27 வயதான நபரொருவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு குறித்த நபர் மேதிலக சிகிச்சைக்காக பிரிஸ்டல் ரோயல் இன்பேர்மரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனவே குறித்த நபரை தாக்கி அவருக்கு உடலுக்கு தீங்கு விளைவித்த குற்றச்சாட்டில், 26 வயதான நபரொருவரை கைது செய்து, வாக்குமூலத்தைப் பெற்றபிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதிகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு…

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அன்ட்ரூ ஸ்டோர்ஸ் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், ”ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி தேர்வில் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அதேபோல கிரிக்கெட் விளையாட்டின் நலன்கருதி இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் இடம்பெறுவர் என தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த தகராறு தொடர்பில் எந்தவொரு கருத்தையும் முன்வைக்க நான் விரும்பவில்லை” என்றார்.

இந்நிலையில், குறித்த விசாரணைகளின் படி இருவரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் 5 வருட சிறைத்தண்டணை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் இல்லாதது நிச்சயம் அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும். எவ்வாறிருப்பினும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகளுடனான ஒரு நாள் போட்டித் தொடரின் பிறகு ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா பயணமாகவுள்ளது. அத்துடன், ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்வணியின் உப தலைவர் பென் ஸ்டோக்ஸ் இவ்வாறான சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எமது வீரர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் : இலங்கை கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான்…

முன்னதாக, 2011ஆம் ஆண்டு பொது இடத்தில் பொலிஸ் அதிகாரியொருவருடன் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் பென் ஸ்டோக்ஸ் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன், அவர் விளையாடுகின்ற டர்ஹம் கழகத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது.

2013இல் இங்கிலாந்து லயன்ஸ் கழகம் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பென் ஸ்டோக்ஸ், தனது சக வீரரான மேட் கோல்ஸுடன் அதிகாலை 5.30 வரை மது அருந்தி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற T-20 போட்டியில் எந்தவொரு ஓட்டத்தையும் பெறாமல் ஆட்டமிழந்து வீரர்கள் அறைக்குச் சென்ற ஸ்டோக்ஸ், அங்கிருந்த அலுமாறியொன்றை கையால் தாக்கி சேதப்படுத்தினார். இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் அதே ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத்திலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.