இராணுவ மெய்வல்லுனரை ஆக்கிரமிக்கும் தமிழ் பேசும் வீரரகள்

166

இலங்கை இராணுவத்தினால் 56ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் (28) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது. 

இலங்கை இராணுவத்தில் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டிகளில் 4 தேசிய சாதனைகளுடன், 21 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.  

இம்முறை போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தையும் வென்ற கிறேஷன் தனஞ்சய தட்டிச் சென்றார்.

தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர்…

இதேநேரம், பெண்கள் பிரிவில் அதி சிறந்த மெய்வல்லுனராக இராணுவ மகளிர் 5ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த நிலானி ரத்னாயக்க தெரிவானார். இவர் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள் 17.82 செக்கன்களில் ஓடிமுடித்து 16 வருடங்கள் பழமையான இலங்கை சாதனையை முறியடித்தார்.  

அத்துடன், பெண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை இவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான 4x200 அஞ்சலோட்டம் மற்றும் பெண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டத்தில் இராணுவ மகளிர் 5ஆவது படைப் பிரிவு புதிய இலங்கை சாதனை நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக தலா 282 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவும், இராணுவ பீரங்கிப் படைப் பிரிவும் இணை சம்பியன்களாகத் தெரிவாகின.

அத்துடன், பெண்கள் பிரிவில் 217 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இராணுவ மகளிர் 5ஆவது படைப் பிரிவு சம்பியனாகத் தெரிவாகியது

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் அதிகமான பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தங்கத்தை இழந்த சண்முகேஸ்வரன்

இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 52.21 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்

இதேநேரம், ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த சண்முகேஸ்வரன், 14 நிமிடங்கள் 39.55 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றெடுத்தார்.   

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஹட்டனைச் சேர்ந்த சண்முகேஸ்வரன், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதகத்தினை வென்றார்.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், குறித்த இரண்டு போட்டிகளிலும் சண்முகேஸ்வரனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டார்

ஷிக் அபாரம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஷிக் ஆண்களுக்கான தட்டெறிதலில் 45.83 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

இதன்படி, தட்டெறிதல் போட்டியில் தனது அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்த ஷிக், இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 4ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தினை வென்று அசத்தினார்

எனினும், கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட அவர், நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்

தனது மீள்வருகையை வெற்றியுடன் ஆரம்பித்த அனித்தா : டக்சிதாவுக்கு இரண்டாமிடம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 97ஆவது தேசிய…

சப்ரினை வீழ்த்திய கிறேஷன்

கடந்த வார இறுதியில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கம் வென்ற இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவின் சப்ரின் அஹமட், இம்முறை இராணுவ மெய்வல்லுனரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியில் 16.02 மீற்றர் தூரத்தை அவர் பாய்ந்தார்

அவருடன் போட்டியிட்ட, ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியின் தேசிய சம்பியனான கிறேஷன் தனஞ்சய 16.32 தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தினையும், ஜி..எம் ஆரியரத்ன (15.78 மீற்றர்) வெண்கலப் பதகத்தினையும் வென்றனர்.  

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றிய சப்ரின், தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முருகைய்யாவுக்கு வெண்கலம்

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட வட மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.பி. முருகைய்யா வெண்கலப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் 4.50 மீற்றர் உயரத்தை அவர் தாவியிருந்தார்.

அசாமுக்கு இரண்டாமிடம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (டெகத்லன்) பங்குகொண்ட நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற குறித்த போட்டியில் 100 மீற்றர் (4ஆவது இடம்), நீளம் பாய்தல் (2ஆவது இடம்), குண்டு எறிதல் (முதலாமிடம்), ஈட்டி எறிதல் (2ஆவது இடம்), 1,500 மீற்றர் (3ஆவது இடம்), தட்டெறிதல் (2ஆவது இடம்), கோலூன்றிப் பாய்தல் (2ஆவது இடம்), 400 மீற்றர் (2ஆவது இடம்), 110 மீற்றர் சட்டவேலி ஓட்டம் (2ஆவது இடம்), உயரம் பாய்தல் (முதலாமிடம்) ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய அவர் 6,812 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்

முப்பாய்ச்சலில் சாப் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றார் சப்ரின் அஹமட்

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை…

குறித்த போட்டியில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த அஜித் கருணாதிலக்க (7,012 புள்ளிகள்) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அதே படைப் பிரிவைச் சேர்ந்த எம்.எம்.ஆர் லக்மால் (6,499 புள்ளிகள்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

கடந்த வருடம் முதல் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அசாம், ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் வெள்ளிப் பதக்கம் வென்றமை சிறப்பம்சமாகும்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனரில் பங்குபற்றியிருந்த அவர், ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

ஷ்ரப்புக்கு மூன்றாமிடம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பொத்துவிலைச் சேர்ந்த மொஹமட் ஷ்ரப், 10.82 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஷ்ரப், இறுதியாக கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அதே 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில், தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஷானை வீழ்த்தி யுபுன் அபேகோன் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 10.44 நிமிடங்களை அவர் எடுத்துக் கொண்டார்

எனினும், இராணுவ பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்த ஹிமாஷ ஷான் போட்டியை 10.62 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

சபானுக்கு முதல் பதக்கம்

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கி படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.48 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இராணுவ மெய்வல்லுனர் சபான் வெற்றியீட்டிய முதல் பதக்கம் இதுவாகும்

கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றியிருந்த அவர், ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

தேசிய மெய்வல்லுனரில் தேசிய சாதனை நிகழ்த்திய 3 வீராங்கனைகள்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 97ஆவது தேசிய…

குறித்த போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவு வீரர்களான ஹிமாஷ ஷான் (21.43 செக்.) தங்கப் பதக்கத்தினையும், அருண தர்ஷன (21.46 செக்.) வெள்ளிப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்

இதுஇவ்வாறிருக்க, கடந்த வாரம் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாசில் உடையாருக்கு இம்முறை இராணுவ மெய்வல்லுனரில் 4ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது

நிப்ராஸுக்கு வெண்கலம்

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் பேட்டியில் பங்குகொண்ட திருகோணமலை மாவட்டம், மூதூரைச் சேர்ந்த ஆர்.எம் நிப்ராஸ், வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 3 நிமிடங்கள் 51.39 செக்கன்களை எடுத்துக் கொண்டார்

கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டியில் முதல்தடவையாகக் களமிறங்கி வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்த நிப்ராஸ், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் வெள்ளிப் பகத்தினை வெற்றி கொண்டார்.

அத்துடன், இவ்வருடம் இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றி அவர், இறுதியாக கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டத்தில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<