எஞ்சலோ பெரேரா இலங்கை ஒருநாள் குழாமில் இணைப்பு

4698
Angelo Perera

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒருநாள் தொடரின் 1ஆவது போட்டியின் நாணய சுழற்சிக்கு 10 நிமிடங்களுக்கு முன் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் அடைந்து இருந்தார்.

அதனால் அவருக்குப் பதிலாக இலங்கை அணியில் மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் எஞ்சலோ பெரேரா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

26 வயது நிரம்பிய எஞ்சலோ பெரேராவை பொறுத்தவரையில் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி கிரிக்கட் அணியின் தலைவராக செயற்பட்டுள்ளதோடு கடைசியாக இலங்கை அணிக்காக 2014ஆம் ஆண்டு டாக்கா நகரில் பங்களாதேஷ் அணியுடனான தொடரில் விளையாடி இருந்தார்.

2013ஆம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து எஞ்சலோ பெரேரா மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவர் விளையாடிய போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் தான் துடுப்பாடி இருந்தார்.

டயலொக் இலங்கை கிரிக்கட் விருதுகள்

எஞ்சலோ பெரேரா இறுதியாக இடம்பெற்ற இங்கிலாந்து “ஏ” அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றி இருந்ததோடு அந்த தொடரில் 4 போட்டிகளில் துடுப்பெடுத்தாடி 56.30 என்ற துடுப்பாட்ட சராசரியில் 169 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அதில் ஒரு அரைச் சதம் உள்ளடங்குவதோடு இலங்கை “ஏ” அணி சார்பாக எஞ்சலோ பெரேரா தான் அதிக ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.

எஞ்சலோ பெரேரா அணியில் இடம்பிடித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி மேலும் சுழற்பந்து சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் காயமடைந்த நுவான் பிரதீப் முழுமையாக குணமடையாத நிலையில் தான் ஒருநாள் குழாமில் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது எஞ்சலோ பெரேராவிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் 1ஆவது போட்டியின் போது மொய்சஸ் ஹென்றிக்ஸ் வீசிய பந்து இலங்கை அணியின் உபதலைவர் தினேஷ் சந்திமாலின் நெஞ்சு விலா எலும்பைப் பதம் பார்த்தது. அதன் பின் இலங்கை அணி களத்தடுப்பு செய்யும் போது அவர் CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தததோடு அதன் முடிவுப்படி பெரிதாக எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை. இதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார் என நம்பப்படுகிறது.

எஞ்சலோ பெரேரா அணியின் இணைந்தமை தொடர்பில் உங்களது கருத்துகளை கீழே பதியவும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்