தேசிய மெய்வல்லுனரில் தேசிய சாதனை நிகழ்த்திய 3 வீராங்கனைகள்

132
Sri Lanka National Athletics

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண், பெண் இருபாலாரிலும் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனராக இலங்கை இராணுவத்தின் நீளம் பாய்தல் வீரர் அமில ஜயசிறியும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக இலங்கை இராணுவத்தின் நிலானி ரத்னாயக்கவும் தெரிவாகினர்.

தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10..

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், நாடளாவிய ரீதியிலிருந்து 600 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

இம்முறை போட்டிகளில் 3 தேசிய சாதனைகளும், 6 போட்டி சாதனைகளும் நிலைநாட்டப்பட்டதுடன் ஓரு போட்டிச் சாதனை சமப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இதில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சி மற்றும் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் விதூஷா லக்ஷானி ஆகியோர் தேசிய சாதனையை முறியடித்திருந்தனர்.

அதேபோல, பெண்களுக்கான ஏழு அம்சப் போட்டிகளின் (ஹெப்டெத்லன்) நடப்புச் சம்பியனான லக்ஷிகா சுகந்தி, 5128 புள்ளிகளைப் பெற்று தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.

அத்துடன், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் தேசிய சம்பியனான ஷா சந்தருவன் மற்றும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க ஆகியோர் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம், ஆண்களுக்கான குண்டு போடுதலில் சமித் மதுஷங்க பெர்ணான்டோ போட்டிச் சாதனையை சமப்படுத்தியிருந்தார்.

Photos: 97th National Athletics Championship – Day 3

ThePapare.com | Hiran Weerakkody | 18/08/2019 Editing…

நிமாலி தேசிய சாதனை

போட்டிகளின் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் மத்திய தூர நட்சத்திர வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.86 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்

இதேநேரம், பெண்களுக்கான 800 மீற்றரிலும் பங்குகொண்ட அவர், போட்டித் தூரத்தை 2 நிமிடங்களும் 04.02 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

விதூஷாவின் தேசிய சாதனை

பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய சம்பியனான விதூஷா லக்ஷானி, நேற்று (18) காலை நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 13.66 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார்.

முன்னதாக, போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலும் பங்குகொண்ட அவர், 6.23 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

சுகந்திக்கு ஹெட்ரிக் தங்கம்

போட்டிகளில் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட லக்ஷிகா சுகந்தி, 13.59 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது தனிப்பட்ட சிறந்த தூரமாகவும் பதிவாகியது

அத்துடன், குறித்த போட்டிப் பிரிவில் 1996ஆம் ஆண்டு ஸ்ரீயானி குலவன்ச (12.91 செக்.) ஓடிமுடித்த காலத்திற்குப் பிறகு பதிவாகிய இரண்டாவது அதிசிறந்த நேரப்பெறுமதியாகவும் இது இருந்தது

இதனைத்தொடர்ந்து பெண்களுக்கான 100 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், பெண்களுக்கான ஹெப்டத்லன் (ஏழு அம்சப் போட்டி) போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஹிருனிக்கு 2 தங்கங்கள்

அமெரிக்காவின் வசித்து வருகின்ற இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன, பெண்களுக்கான 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்

போட்டிகளின் இரண்டாவது நாளில் நடைபெற்ற பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 35 நிமிடங்கள் 30.0 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்ற அவர் 16 நிமிடங்கள் 54.9 செக்கன்களில் ஓடிமுடித்து இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கூவீகரித்துக்கொண்டார்.

100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி சம்பியன்

பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை ஹிமாஷ ஷான், வினோஜ் சுரன்ஜய டி சில்வா ஆகிய இருவரும் 10.49 செக்கன்களில் நிறைவு செய்தனர்.

எனினும், சலன அசைவு புகைப்படத்தின் அடிப்படையில் ஹிமாஷ ஷானுக்கு முதலிடமும், வினோஜ் சுரன்ஜயவுக்கு இரண்டாவது இடமும் வழங்கப்பட்டதுடன், யுபுன் பிரியதர்சன அபேகோன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்கவை வீழ்த்தி சுகந்தி தங்கப் பதக்கத்தை வென்றார்

Photos: 97th National Athletics Championship 2019 – Day 1

ThePapare.com | Waruna Lakmal| 16/08/2019 Editing and re-using..

குறித்த போட்டியை 12.08 செக்கன்களில் நிறைவுசெய்த சுகந்தி தங்கப் பதக்கத்தையும், அமாஷா  டி சில்வா (12.20 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், சர்மிளா ஜேன் (12.24 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர் 

குறித்த போட்டியில் பங்குபற்றிய ருமேஷிகா ரத்னாயக்க, போட்டியை நிறைவுசெய்ய 25 மீற்றர் எஞ்சியிருந்த போது காலில் திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக துரதிஷ்டவசமாக தோல்வியைத் தழுவினார்

சந்தருவனின் போட்டிச் சாதனை

கோலூன்றிப் பாய்தலில் நடப்பு மற்றும் தெற்காசியாவின் நடப்பு சம்பியனுமாகிய ஷா சந்தருவன் தங்கப் பதகத்தை வென்று அசத்தினார். குறித்த போட்டியில் 5.01 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், தனது சொந்த போட்டிச் சாதனையை புதுப்பித்தார்

குறித்த போட்டியில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன், .பவிதரன் 4.20 மீற்றர் உயரத்தைத் தாவி 9ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

400 மீற்றரில் அருண, நதீஷா அபாரம்

ஆசிய கனிஷ் சம்பியனான அருண தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

உபாதையின் பிறகு முதல்தடவையாக இம்முறை தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய அவர், போட்டித் தூரத்தை 46.76 செக்கன்களில் நிறைவுசெய்து தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.11 செக்கன்களில் நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றார்.

200 மீற்றரில் சபான், பாசிலுக்கு வெற்றி

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப்  பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட இளம் வீரரான மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.59 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

குறித்த போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை அவர் 21.68 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ வீரரான வினோஜ் சுரன்ஜய டி சில்வா 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 21.41 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

தமிழ் பேசும் வீரர்கள் ஆறுதல்

இம்முறை தேசிய மெய்வல்லுனரில் வடக்கு, மலையகம் மற்றும் நாடு பூராகவும் இருந்து தேசிய மட்டத்தில் ஜொலித்து வருகின்ற ஒருசில முன்னணி தமிழ் பேசுகின்ற வீரர்களும் பங்குகொண்டனர்

இதில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட் மற்றும் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வர்ன ஆகியோர் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான் வெள்ளிப் பதக்கத்தையும், பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருசில வீர வீராங்கனைகளும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் பங்குபற்றியிருந்தனர்.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவியான என்.டக்சிதா வெள்ளிப் பதக்கத்தையும், கோலூன்றிப் பாய்தல் நடப்புச் சம்பியனான அனிதா ஜெகதீஸ்வரன் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<