முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகள்! ; மெதிவ்ஸின் அசத்தல் பந்துவீச்சு

ICC Men’s T20 World Cup 2021

5601
Getty images

இலங்கை அணிக்காக அறிமுகமாகிய காலப்பகுதியிலிருந்து, பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் மிக அதீத திறமையை வெளிப்படுத்துக்கூடிய எதிர்கால சகலதுறை வீரர் என்ற பெயரை பெற்றிருந்தவர் அஞ்செலோ மெதிவ்ஸ்.

இன்றளவிலும் இலங்கை அணியில் பெயரிடக்கூடிய முன்னணி சகலதுறை வீரர் என்றால், அது அஞ்செலோ மெதிவ்ஸ்தான். இலங்கை அணியில் புதிய சகலதுறை வீரர்கள் உருவாகிவந்தாலும், அனுபவம் மற்றும் அனைத்துவகை போட்டிகளிலும் விளையாடுவது என்பதை பார்க்கும் போது, மெதிவ்ஸிற்கு முதலிடம் கொடுக்கலாம்.

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

கடந்த சில வருடங்களாக இவரது பிரகாசிப்பின் குறைப்பாடு, உபாதை மற்றும் உடற்தகுதி போன்ற விடயங்கள் கேள்வியை எழுப்பியிருந்தாலும், உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணிக்கு திரும்பினார். எனினும், இலங்கை கிரிக்கெட்டின் இளையோருடனான பயணம் மற்றும் மெதிவ்ஸின் பின்வாங்கல் அவர் தொடர்பிலான பேச்சுக்களை நிறுத்தியுள்ளது.

தற்போதைய காலப்பகுதியில் அவரின் திறமை முழுமையாக வெளியாகின்றமை குறைவாக இருந்தாலும், அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய போது, அவரின் திறமை அனைவராலும் மிகவும் அபரிமிதமாக பார்க்கப்பட்டது.

அஞ்செலோ மெதிவ்ஸ் 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியிருந்தாலும், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் அவரின் திறமையை முழு உலகமும் காணக்கூடியதாக இருந்தது.

ஒருநாள் போட்டிகளில் 2008ம் ஆண்டு அஞ்செலோ மெதிவ்ஸ் அறிமுகமாக, T20I போட்டிகளை பொருத்தவரை நேரடியாக 2009ஆம் ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இலங்கை அணியின் முதல் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். இந்தப்போட்டியில், அஞ்செலோ மெதிவ்ஸுடன், இசுரு உதானவும் அறிமுகமாகியிருந்தார்.

இந்தப் போட்டித்தொடர் முழுவதும் அஞ்செலோ மெதிவ்ஸின் துடுப்பாட்டமும், பந்துவீச்சும் அசத்தலாக இருந்ததுடன், களத்தடுப்பிலும் அபாரம் காட்டினார். அதிகமான ஓட்டங்கள் மற்றும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், அணிக்கு தேவையான தருணங்களில் அவர் பிரகாசித்த விதம் மிகவும் அற்புதமாகவிருந்தது.

குறித்த இந்த தொடரில் இலங்கை அணி வெற்றிகளை குவித்து முன்னேறியதுடன், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் தக்கவைத்தது. இலங்கை அணியானது, மிகவும் பலம் மிக்க அணிகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் கிண்ணம் வென்ற பாகிஸ்தான் போன்ற முன்னணி அணிகளை வீழ்த்தி தங்களுடைய வெற்றி பயணத்தினை தொடர்ந்திருந்தது.

லீக் போட்டிகளில் மிகச்சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், நொக்-அவுட் போட்டிகளில் பிரகாசிப்பதென்பது, இலகுவான விடயமல்ல. ஒவ்வொரு போட்டியிலும் அழுத்தம் மிக அதிகமாகவே காணப்படும்.

அந்தவகையில், இலங்கை அணி, தங்களுடைய அரையிறுதியில் பலமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள தயாராகியது. சிக்ஸர்களை விளாசக்கூடிய சக்திவாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணியை நினைத்தவுடன் வெற்றிக்கொள்ள முடியாது. அதற்கான சிறந்த ஆரம்பம் கிடைக்கவேண்டும்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அழுத்தமான போட்டிகளில், ஆரம்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுக்கு ஏற்ப, திலகரட்ன டில்ஷான் இலங்கை அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.

Gettyimages

மிகச்சிறந்த ஆரம்பம் மாத்திரமின்றி, முழுமையான துடுப்பாட்ட இன்னிங்ஸையும் தனியாளாக தாங்கியதுடன், 96 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாச, அஞ்செலொ மெதிவ்ஸ் கடைசி 4 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும், இலங்கை அணி மொத்தமாக 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் தி ஓவல் மைதானத்தை பொருத்தவரை, இலங்கை அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கையானது, மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கு போதுமானதா? என்ற கேள்விகள் இலங்கை அணிக்குள்ளும் அதிகமாக பேசப்பட்டது.

அணியை பொருத்தவரை, மேற்கிந்திய தீவுகளை கட்டுப்படுத்தக்கூடிய சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். காரணம், மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர்கள் இன்னிங்ஸை சரியாக ஆரம்பித்தால், போட்டியை நிறைவுசெய்துவிடுவர் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது.

ஆனால், இந்த ஆரம்பத்தை யார் பெற்றுக்கொடுப்பது? என்ற கேள்விக்கு, அஞ்செலோ மெதிவ்ஸ் இளம் வீரராக இருந்தாலும், அதற்கான பதிலை கொடுத்திருந்தார். இலங்கை அணிக்கான மறக்கமுடியாத மிகச்சிறந்த T20i பந்துவீச்சு ஆரம்பம் ஒன்றை மெதிவ்ஸ் பெற்றுக்கொடுத்தார்.

புதிய வீரர், அனுபவம் குறைந்த வீரர் என்ற முத்திரையுடன், பந்துவீச்சில் வேகமும் இல்லை என்ற நிலையில் ஆரம்பித்த மெதிவ்ஸ், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தன்னுடைய முதல் ஓவரில் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகளை சரித்தார்.

Gettyimages

முதல் பந்துக்கு கிரிஸ் கெயில் முதல் ஓட்டத்தை பெற்றுக்கொள்ள, இரண்டாவது பந்தில் சேவியர் மார்ஷலை எட்ஜ் முறையில் ஆட்டமிழக்கச்செய்து, இலங்கை ரசிகர்களின் முகத்தில் பூரிப்பை ஏற்படுத்தினார். சேவியர் மார்ஷலின் துடுப்பாட்ட மட்டையில் பந்துப்பட்டு, நேரடியாக விக்கெட்டை தாக்கியது.

தொடர்ந்து தன்னுடைய நான்காவது பந்தினை மெதிவ்ஸ் வீச, விக்கெட்டின் வலது புறத்துக்கு சென்று, பந்தை இடதுபுறத்துக்கு லெண்ட்ல் சிம்மன்ஸ் அடிக்க முற்பட, பந்து விக்கெட்டை தாக்கியது.

இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்திய அஞ்செலோ மெதிவ்ஸ் பந்து ஓவரின் இறுதி பந்தை டுவைன் பிராவோவுக்கு வீசினார். இந்த பந்தும், பிராவோவின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு, விக்கெட்டை தாக்கியதில், இலங்கை அணிக்கும், அஞ்செலோ மெதிவ்ஸிற்கும் மிகச்சிறந்த ஆரம்பம் கிடைத்திருந்தது. வெறும் ஒரு ஓட்டத்துக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த மூன்று விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே பெற்றுக்கொடுத்த பிரகாசிப்பு, இதுவரையிலும் அவருடைய தனித்துவமான பந்துவீச்சு பிரகாசிப்புகளில் மிகச்சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மெதிவ்ஸின் மூன்று விக்கெட்டுகளுடன் கிடைத்த ஆரம்பத்துடன், ஏனைய பந்துவீச்சாளர்களும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த, மேற்கிந்திய தீவுகள் அணி 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

துரதிஷ்டவசமாக இலங்கை அணி இறுதிப்போட்டியில் கிண்ணத்தை பாகிஸ்தான் அணியிடம் தவறவிட்டாலும், அஞ்செலோ மெதிவ்ஸின் இந்த பிரகாசிப்பு அவரை இலங்கையின் கிரிக்கெட் எதிர்காலம் என்ற எதிர்பார்ப்பை ஆழமாக பதித்ததுடன், அவர் விளையாடியிருந்த போட்டிகளிலும் தொடர்ந்தும் அதனை நிறைவேற்றியிருந்தார்.

இதன் காரணமாகவே, இன்றளவிலும் அஞ்செலோ மெதிவ்ஸ் என்ற வீரர், இலங்கையின் மறக்கவும், மறுக்கவும் முடியாத சகலதுறை வீரர்களில் ஒருவராக பாராட்டப்பட்டு வருகின்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…