இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தமது 2ஆவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

மூன்றாவது நாளான இன்று தமது முதல் இனிங்சைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  ஜிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய ப்ரைன் சாரி டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகூடிய ஒட்டங்களாக 80 ஓட்டங்களை இன்று பதிவு செய்து கொண்டார். இவரைத் தவிர கிரெய்க் எர்வைன் 64 ஓட்டங்களையும், சோன் வில்லியம்ஸ் 58 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவர் ரங்கன ஹேரத் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் தில்ருவன் பெரெரா 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Photo Courtesy ESPN
Photo Courtesy ESPN

ஜிம்பாப்வே அணியுடனான இப்போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத், கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து உடைய ஒன்பது அணிகளுக்கும் எதிராக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக இந்த சாதனைக்கு டேல் ஸ்டெய்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய பந்து வீச்சாளர்களே உரித்துடையவர்களாக இருந்தனர். அத்துடன் ரங்கன ஹேரத் இதுவரை 27 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து வீரர் இயன் போத்தமின் சாதனையை சமப்படுத்தினார்.

பின்னர் 232 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இனிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி முதலிரண்டு விக்கெட்டுகளையும் 16 ஓட்டங்களுக்குள் இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

எனினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன 119 பந்துகளுக்கு அரைச் சதம் கடந்து 54 ஓட்டங்களை ஆட்டமிழக்கமால் பெற்றுக்கொண்டார். ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு ஜிம்பாப்வே அணியைவிட 6 விக்கெட்டுகள் கையிருப்பில் 334 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது. ஜிம்பாப்வே அணி சார்பாகப் பந்து வீச்சில் அதிரடி காட்டிய கார்ல் மும்பா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 504(144.4) – அசேல குணரத்ன 116(193), தனஞ்சய டி சில்வா 127(245), உபுல் தரங்க 79(155), கௌஷல் சில்வா 37(73), ஹெமில்டன் மசகட்ஸா 34/2(13), க்றிஸ் 92/1(23), டொனால்ட் திரிபனோ 91/3(32), கிரேம் கிரீமர் 136/3(40)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) : 272(82.1) – பிரையன் சாரி 80(158), க்ரெய்க் எர்வைன் 64(112), சோன் வில்லியம்ஸ் 58(93), ரங்கன ஹேரத் 89/5(26) தில்ருவன் பெரேரா 51/3(18), சுரங்க லக்மால் 55/2(21.1)

இலங்கை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 102/4(40) – திமுத் கருணாரத்ன 54*(119), அசேல குணரத்ன 6*(27), கார்ல் மும்பா 31/3(11), கிரேம் கிரீமர்  21/1(8)

போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடரும்