இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணிகளுக்கிடையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காலி மஹிந்த கல்லூரி வீரர் நவோத் பரனவிதானவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இலங்கை இளையோர் அணி நிர்ணயித்திருந்த 221 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்காக பவன் ஷாஹ் மாத்திரம் அரைச்சதத்தைப் பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் மறுபடியும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தயிருந்தனர். இதனால் இந்திய இளையோர் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியதுடன், 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை இளையோர் அணி 2-1 என்ற முன்னிலை பெற்றுள்ளது.
தனன்ஜயவின் அபாரத்தால் பலமான இந்திய இளையோர் அணியை வீழ்த்திய இலங்கை
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய இளையோர் அணியும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற சமநிலையுடன் இன்று (05) மூன்றாவது போட்டியில் களமிறங்கியது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை இளையோர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
இதன்படி, களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நவோத் பரனவிதான மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியான ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டனர்.
இதில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரனவிதான அரைச்சதம் கடக்க, ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிஷான் மதுஷ்கவும் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடியதுடன், முதல் விக்கெட்டுக்காக இவ்விரண்டு வீரர்களும் 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை தொடர முடியாமல் போன நவோத் பரனவிதான 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, சித்தார்த் தேசாயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய சித்தார்த் தேசாய், மறுமுனையில் அபாரமாக துடுப்பெடுத்தாடி வந்த நிஷான் மதுஷ்கவை 42 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் இலங்கை அணி 24.2 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து இந்தியாவின் சவால் மிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி வீரர்கள் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
எனினும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பசிந்து சூரியபண்டார 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மத்திய வரிசையில் அணித் தலைவர் நிபுன் தனஞ்சய 26 ஓட்டங்களையும், நிபுன் மாலிங்க 24 ஓட்டங்களையும் குவித்து இலங்கை அணிக்கு ஆறுதல் கொடுத்தனர்.
தொடர்ந்து பின்வரிசை வீரர்களாக களமிறங்கிய சந்துன் மெண்டிஸ் 6 ஓட்டங்கள், லஷித மானசிங்க 3 ஓட்டங்கள், நவீன் பெர்னாண்டோ ஒரு ஓட்டம் என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, இலங்கை இளையோர் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய இளையோர் அணி சார்பில் பந்து வீச்சில் அஜய் தேவ் கவுட், யடின் மங்வானி, மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை
பின்னர், 221 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய இளையோர் அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சில் ஆரம்பம் முதல் தடுமாறியிருந்தனர்.
இதில் இந்திய அணியின் முதல் வரிசை வீரர்களான அனுஜ் ரவாட் (26), தேவ்தத் படிக்கல் (13), அதர்வா டைட் (19) மற்றும் அணித் தலைவர் அர்யான் ஜுயல் (9) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக பவன் ஷாஹ்வுடன் ஜோடி சேர்ந்த யாஷ் ராத்தோட் 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
தொடர்ந்து நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய யாஷ் ராத்தோட் 57 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை பெற்றிருந்த போது சஷிக்க துல்ஷானின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அஜே தேவ் கவுட்டின் (07) விக்கட்டையும் சஷிக்க வீழ்த்தினார்.
இதனையடுத்து சகலதுறை வீரர் சந்துன் மெண்டிஸின் அபார பந்துவீச்சில் பின்வரிசை வீரர்களான மொஹிட் ஜங்ரா 13 ஓட்டங்களுடனும், ஹர்ஷ் தியாகி ஓட்டம் எதனையும் பெறாமலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்க இந்திய அணி மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியது.
இந்த நிலையில், போட்டியின் இறுதி ஓவரில் இந்திய அணிக்கு 12 ஓட்டங்களும், இலங்கை அணிக்கு இரண்டு விக்கெட்டுக்களும் வெற்றி பெறுவதற்கு தேவைப்பட்டது.
இதன்படி, இறுதி ஓவரை சகலதுறை வீரரான நவோத் பரனவிதான வீசியிருந்தார். இதன் முதல் பந்தை எதிர்கொண்ட பவன் ஷாஹ்வுக்கு எந்தவொரு ஓட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து 2ஆவது பந்தை எதிர்கொண்ட பவன் ஷாஹ், நிஷான் மதுஷ்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
எனவே இந்திய அணிக்கு 4 பந்துகளில் மேலும் 12 ஓட்டங்களைப் பெற வேண்டியிருக்க, இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய சித்தார்த் தேசாய், சொனால் தினூஷவின் அபார களத்தடுப்பினால் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்திய அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
இதன்படி, இந்திய அணி 49.3 ஓவர்களில் 213 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்திய இளையோர் அணிக்காக இறுதி வரை தனியொருவராக போராட்டத்தை வெளிப்படுத்திய பவன் ஷாஹ், அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் சார்பில் பந்துவீச்சில் சஷிக்க துல்ஷான் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், நவோத் பரனவிதான மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்துக்கொண்டனர்.
உலகக் கிண்ணத்துக்கு கனவு காணும் இலங்கை அணியின் இன்றைய நிலை
இதன்படி இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி மொறட்டுவ டி சொய்ஸா கிரிக்கெட் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















