“ராவல்பிண்டி ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” ; ஐசிசி

Australia tour of Pakistan 2022

168

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டிக்கான ராவல்பிண்டி மைதான ஆடுகளம், ஐசிசியின் ஆடுகளத்தன்மை விதிமுறைகளுக்கு அமைய சராசரிக்கும் குறைவானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணியானது, 1998ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் அதிகமான ஓட்டங்களை குவித்த நிலையில், போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

>>இரண்டாவது டெஸ்டில் பெதும் நிஸ்ஸங்க விளையாடுவதில் சந்தேகம்!

விளையாடப்பட்ட மூன்று இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 14 விக்கெட்டுகள் மாத்திரம் வீழ்த்தப்பட்ட நிலையில், 1187 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 476/4 ஓட்டங்கள், அவுஸ்திரேலிய அணி 459/10 ஓட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டிழப்பின்றி 252 ஓட்டங்கள் என இலகுவாக ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

இந்த ஆடுகளம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தங்களுடைய அதிருப்திகளையும் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், இந்த முதல் டெஸ்ட் போட்டியின் மத்தியஸ்தராக செயற்பட்ட இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, ராவல்பிண்டி ஆடுகளம் சராசரிக்கும் குறைவான தன்மையை கொண்டிருப்பதாக அறிவித்து, ஒரு தரக்குறைப்பு புள்ளியையும் வழங்கியுள்ளார்.

ஐசிசியின் விதிமுறைப்படி சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதான ஆடுகளங்கள் தரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், ஆடுகளங்கள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சராசரியானதாக அமையவேண்டும். இல்லையெனில் அதற்கான தரக்குறைப்பு புள்ளிகள் வழங்கப்படும்.

அதன்படி, ஒரு மைதானமானது 5 வருட காலப்பகுதிக்குள் 5 தரக்குறைப்பு புள்ளிகளை பெறுமானால் 12 மாதங்களுக்கும், 10 புள்ளிகளை பெறுமானால் 24 மாதங்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான தடையை பெற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<