அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுக்கான திகதி அறிவிப்பு

164

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இவ்வருடத்துக்கான தேசிய ரீதியிலான போட்டிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இவ்வருடம் நடைபெறவிருந்த அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது

இதன்படி, தற்போதைய அறிவிப்பின்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 31 வகையான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தையும் குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதில் 15 போட்டி நிகழ்ச்சிகள் குருநாகல் வெலகெதர மைதானத்திலும், எஞ்சிய போட்டிகள் அனைத்தும் கண்டி போகம்பர மைதானத்திலும் நடைபெறவுள்ளன

செஸ், வலைப்பந்தாட்டம், கரம், கபடி, கராத்தே, உடற்பயிற்சி, த்ரோபோல், கிரிக்கெட் (Soft Ball), சைக்கிளோட்டம், எல்லே, றக்பி, கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டம் ஆகியன குருநாகலில் நடைபெறவுள்ளன.  

தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு

நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தெற்காசிய…..

இதேநேரம், பெட்மிண்டன், கிரிக்கெட், பளுதூக்கல், மல்யுத்தம், டைக்வொன்டோ, ஜுடோ, டென்னிஸ், குத்துச்சண்டை, கால்பந்து, ஹொக்கி மற்றும் மெய்வல்லுனர் ஆகிய போட்டிகள் கண்டியில் நடைபெறவுள்ளன

இதேவேளை, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போட்டிகளை கொழும்பு சுகததாஸ அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

கடந்த காலங்களைப் போல இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரிவாகிய சுமார் 39 ஆயிரம் மாணவர்களும் 37 ஆயிரம் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.  

அத்துடன், மெய்வல்லுனர் போட்டிகளுக்காக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 6 ஆயிரம் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக கல்வி அமைச்சு சுமார் 6 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதன்படி, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<