ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இலங்கை வருகை

173
AFC president

இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் (AFC) தலைவர் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல்…

தன்னுடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தின் மூலம் நேற்றுமுன்தினம்(02) அவர் இலங்கையை வந்தடைந்தார். அவருடன் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் விண்ட்சர் ஜோன், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் ரவி குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் இலங்கைக்கான குறித்த விஜயத்தில் பங்குகொண்டிருந்தனர்.

இதன்போது, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, செயலாளர் யூ.எல் ஜஸ்வர், முன்னாள் உபதலைவர் ஆர். புவனேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

ஒரே ஆசியா, ஒரே குறிக்கோள் என்பதை இலக்காகக் கொண்டு ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத் தலைவர் செயற்பட்டு வருகின்றார்.

இதன்படி, இலங்கையின் கால்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயவும், இலங்கை கால்பந்து விளையாட்டின் அபிவிருத்திக்கு ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அவர் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தியுள்ளார்.

இதேநேரம் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் சல்மானுக்கும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று(03) இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு சர்வதேச தொழில்நுட்ப பணிப்பாளர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளவும், இலங்கை அணிக்கு மேலும் சர்வதேச கால்பந்து போட்டிகளைப் பெற்றுக்கொடுக்கவும் அஷ்ஷெய்க் சல்மான் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன விருது வழங்கும் விழாவை இலங்கையில் நடத்துவதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக களினியில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற கால்பந்து பயிற்சி மத்திய நிலையத்தின் நிர்மானப் பணிகளுக்காக செலுத்த வேண்டியுள்ள 19 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொடுக்கவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் சுமார் 76 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற களனிய கால்பந்து பயிற்சி மத்திய நிலையத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இதில் 30 வீரர்களுக்கும், 6 பயிற்சியாளர்களுக்கும் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்னான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆசிய கூட்டுச் சம்மேளனத்தின் தவைர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று(03) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல்..

இதன்போது இலங்கையின் கால்பந்து விளையாட்டின் பின்னடைவு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக பௌதீக மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை வழங்கி கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் இன்றைய தினம்(04) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஹ்ரைன் நாட்டின் இளவரசரான ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா, உலகின் மிகப் பெரிய விளையாட்டு அமைப்பான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவராகவும், அதன் அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். இறுதியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிபாவின் தலைவர் பதவிக்காகவும் அவர் போட்டியிருந்தார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா மீண்டும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<