ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை அணி!

1317

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷ் வரவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

“உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷ் வரவுள்ளது” என அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

Read : மிக்கி ஆர்தர், திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை வரவிருந்தது. எனினும், தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த தொடர் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள போதும், திகதிகள் அறிவிக்கப்படவில்லை.

“நாம் மேற்குறித்த தொடருக்கு முன்னரோ அல்லது தொடரையடுத்தோ இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். ஆனால், இதுவரை குறித்த தொடருக்கான திகதிகளை உறுதிசெய்யவில்லை” 

இலங்கை கிரிக்கெட் அணி ஏற்கனவே, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்காக தயாராகிவருகின்றது. எனினும், துரதிஷ்டவசமாக அணியின் லஹிரு திரிமான்ன மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. 

எனவே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேநேரம், பங்களாதேஷ் அணி தற்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. 

எனவே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் பங்களாதேஷ் அணி, அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் என எதிர்பார்ப்பதுடன், தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் வீரர்கள் தொடர்ச்சியாக கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். அதனால், அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் குறித்து தற்போதைய நிலையில், உறுதிப்படுத்த முடியாது என அக்ரம் கான் மேலும் குறிப்பிட்டார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க