ஒருநாள் தொடரிலும் சாதிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?

830

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற T20 தொடரினை இலங்கை 2-1 எனப் பறிகொடுத்த போதும் T20 போட்டிகள் வரலாற்றில் பதியப்பட்ட ஒரு சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸினை இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது T20 போட்டியில் தசுன் ஷானக்க வெளிப்படுத்தியிருந்தார்.

>>தசுன் ஷானகவின் அதிரடியுடன் திரில் வெற்றிபெற்றது இலங்கை!

இப்போட்டியில் கிடைத்த அபார நம்பிக்கையுடன் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இலங்கை வீரர்களை வழிநடாத்தவிருக்கின்றார்.

இலங்கையில் கஷ்டமான பொருளாதார சூழ்நிலை ஒன்று நிலவி வரும் நிலையில் அவுஸ்திரேலிய வீரர்களுடன் இலங்கை அணி மூன்றாவது T20 போட்டியில் பெற்ற அபார வெற்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சி தந்திருக்கும் நிலையில், இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த காலம்

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளை நோக்கும் போது எந்த சந்தேகமுமின்றி, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் காட்டி இருந்ததனை பார்க்க முடிகின்றது.

இரு அணிகளும் இதுவரை 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அதில் அவுஸ்திரேலிய அணி 61 போட்டிகளில் வெற்றியையும் இலங்கை 32 போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்திருப்பதனை காண முடியும். அதேநேரம் 4 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருக்கின்றன.

இலங்கை அணி கடைசியாக 2010ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் ஒன்றினை வெற்றி கொண்டிருந்ததோடு, கடைசியாக 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி இங்கே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 4-1 எனக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே கடந்த கால முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நடக்கப் போகும் ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதனை எதிர்பார்க்க முடியும்.

இலங்கை அணி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்யும் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்குள் அடங்காத நிலையில் இலங்கை அணிக்கு சற்று அழுத்தம் குறைந்ததாக அவுஸ்திரேலிய ஒருநாள் தொடர் அமைகின்றது.

எனினும் திறமையை நிரூபிக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கையின் இளம் வீரர்களுக்கு பெருத்த சவாலாக இந்த ஒருநாள் தொடர் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை அணியில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இணைந்திருக்கும் பானுக்க ராஜபக்ஷ T20 தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போக, தனது இடத்தினை இலங்கை அணியில் நிரூபிக்க போராட வேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

>>WATCH – “தசுன் ஷானகவின் இன்னிங்ஸ் விசேடமானது” – பானுக ராஜபக்ஷ

அத்துடன் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கும் இலங்கை ஒருநாள் அணியில் நிரந்தர இடம் பெற்றுக்கொள்வதற்கு பொன்னான வாய்ப்புக்களில் ஒன்றாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைகின்றது.

அவுஸ்திரேலிய A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் பிரகாசித்த இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகே தனது அபார ஆட்டத்தின் மூலம் இலங்கை ஒருநாள் அணியில் முதல் முறையாக வாய்ப்பினை பெற்றிருப்பதோடு அவரும் தனக்கான சந்தர்ப்பத்தினை இந்த ஒருநாள் தொடரில் எதிர்பார்த்திருக்கின்றார். இது தவிர அனுபவ வீரரான தினேஷ் சந்திமாலும் தன்னுடைய திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றார்.

மறுமுனையில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க மற்றும் தனன்ஞய டி சில்வா போன்ற வீரர்கள் முன்வரிசையினைப் பலப்படுத்த மத்திய வரிசையில் இலங்கை அணிக்கு அதன் தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ன போன்ற வீரர்கள் பெறுமதி சேர்க்கின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது பிரதான வேகப்பந்துவீச்சாளராக துஷ்மந்த சமீர காணப்பட, அணியின் சுழல்பந்துவீச்சுத்துறையினை வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் பலப்படுத்துகின்றனர்.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, சாமிக்க கருணராத்ன, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, ஜெப்ரி வெண்டர்சே, லஹிரு மதுசங்க, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான்

அவுஸ்திரேலிய அணி

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை T20 போட்டிகளை விட சிறந்த ஒரு குழாத்துடன் இலங்கை அணியினை ஒருநாள் போட்டிகளில் எதிர்கொள்ளவிருக்கின்றது. அதாவது உபாதை காரணமாக இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் ஆடாது போன மிச்சல் ஸ்டார்க், வேக நட்சத்திரம் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கின்றனர். இது மிகவும் முன்னேற்றகரமான பந்துவீச்சுத்துறையுடன் அவுஸ்திரேலிய அணி, இலங்கையை ஒருநாள் தொடரில் எதிர்கொள்வதனை குறிக்கின்றது.

இதேநேரம் அதிக அனுபவம் கொண்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு பலம் சேர்க்கின்றனர். இன்னும் உதிரி வீரர்களாக காணப்படும் மார்னஸ் லபுஷேன், கிளன் மெக்ஸ்வெல், ட்ராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு துடுப்பாட்டத்தில் பெறுமதி சேர்க்கின்றனர்.

>>WATCH – இலங்கை ரசிகர்களுக்கு மறக்கமுடியாத வெற்றியை பெற்றுத்தந்த ஷானக!

அதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுத்துறையானது முன்னர் குறிப்பிட்டதனைப் போன்று மிச்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசல்வூட் போன்ற முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமும், அஷ்டன் அகார் மற்றும் மிச்சல் ஸ்வப்ஸன் ஆகியோரின் சுழல் மூலமும் பலம் பெறுகின்றது.

அவுஸ்திரேலிய குழாம் 

ஆரோன் பின்ச் (தலைவர்), அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கெரி, பேட் கம்மின்ஸ், கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபச்சேனே, மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர்

ஒருநாள் தொடர் அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 14 – பல்லேகல

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 16 – பல்லேகல

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 19 – கொழும்பு

நான்காவது ஒருநாள் போட்டி – ஜூன் 21 – கொழும்பு

ஐந்தாவது ஒருநாள் போட்டி – ஜூன் 24 – கொழும்பு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<