அபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ள 8 இலங்கை வீரர்கள்

Abu Dhabi T10 League 2021

1638

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடரில், இலங்கை அணியின் 8 வீரர்கள் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் ஓய்வுபெற்ற வீரர் இசுரு உதான, ஏற்கனவே பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், இவருடன் மொத்தமாக 8 வீரர்கள் அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ளனர்.

இதில், மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக இலங்கை அணியின் 4 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, சகலதுறை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோருடன் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும்  மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

அதேநேரம், தற்போது ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க நோர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இதேவேளை, இசுரு உதான மற்றும் லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசக்கூடிய இளம் வீரர் மதீஷ பதிரண ஆகியோர் பங்களா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபி T10 லீக் எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…