இலங்கைக்காக வரலாற்று வெள்ளிப் பதக்கத்தை வென்ற துஷேன் சில்வா

5th Asian Youth Athletics Championship 2023

147

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையைப் பிரதிநிதித்ததுவப்படுத்தி பங்குகொண்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை அவர் சுவீகரித்துள்ளார்.

இதன்மூலம் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழாவொன்றில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார். இதற்முன் 1951இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீரராக எம்.ஏ அக்பர் இடம்பிடித்திருந்தார்.

அத்துடன், குறித்த போட்டியில் தனது தனிப்பட்ட அதிசிறந்த உயரத்தை தாவிய அவர், இளையோர் தேசிய சாதனையையும் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எவ்வாறாயினும், இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் முதல் தடவையாக கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குகொண்ட காலி மஹிந்த கல்லூரி வீரர் ஜத்ய கிருலு போட்டித் தூரத்தை 48.57 செக்கன்களில் ஓடிமுடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

30 ஆசிய நாடுகளின் பங்குபற்றலுடன் ஏறக்குறைய ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஆண் வீரர்கள் மற்றும் 2 பெண் வீரர்கள் என மொத்தம் 7 வீரர்கள் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (28) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

>>  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<