புவிதரனின் இலங்கை சாதனையை முறிடித்தார் ஜனித்

131
58th Army Athletics Championship 2023 Final Roundup

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று (31) நிறைவுக்கு வந்த 58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4 இலங்கை சாதனைகளும், 15 போட்டிச் சாதனைகளும் மற்றும் 8 இராணுவ மெய்வல்லுனர் போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.16 மீட்டர் உயரத்தைத் தாவி சச்சின் எரங்க ஜனித் புதிய இலங்கை சாதனை படைத்தார். இது போட்டிச் சாதனையாகவும் பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் அருந்தவராசா புவிதரன், 5.15 மீட்டர் உயரம் தாவி நிகழ்த்pய இலங்கை சாதனையை ஒரு மீட்டரினால் எரங்க ஜனித் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எவ்வாறாயினும், குறித்த போட்டியில் பங்குகொண்ட புவிதரன், 5.00 மீட்டர் உயரம் தாவி இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, போட்டிகளின் 2ஆவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் லக்மால்; பெர்னாண்டோவும் (45 நிமிடங்கள் 12.22 செக்.), அதே போட்டியில் பெண்கள் பிரிவில் கல்ஹாரி மத்ரிகாவும் (49 நிமிடங்கள் 25.97 செக்.) இலங்கை சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கங்களை வென்றனர். இதில் லக்மால் பெர்னாண்டோவின் காலப் பெறுமதி போட்டிச் சாதனையாகவும் இடம்பிடித்தது.

இதேநேரம், ஆண்களுக்கான முப்பபாய்ச்சலில் 16.72 தூரம் பாய்ந்து ஸ்ரேஷன் தனன்ஜய, தனது சொந்த இலங்கை சாதனையை புதுப்பித்தார். அத்துடன், இது போட்டிச் சாதனையாகவும் பதிவாகியது.

ஆண்களுக்கான 100 மீட்டரில் சமோத் யோதசிங்க (10.44 செக்.), ஆண்களுக்கான 200 மீட்டரில் அருண தர்ஷன (20.65 செக்.), ஆண்களுக்கான 4தர200 மீட்டர் அஞ்சலோட்டம் மற்றும் ஆண்களுக்கான 4தர400 மீட்டர் அஞ்சலோட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை பொறியியல் படைப்பிரிவு அணி போட்டிச் சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான நிலானி ரத்நாயக, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2 போட்டி சாதனைகளை முறியடித்தார். இதில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டி (9 நிமிடங்கள் 03.16 செக்.) மற்றும் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் (16 நிமிடங்கள் 03.16 செக்.) அவர் போட்டி சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் டில்ஷி குமாரசிங்க (02 நிமிடங்கள் 04.89 செக்.), பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ரந்தி குரே (13.51 மீட்டர்), பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமாயக (53.38 செக்.) ஆகியோர் போட்டிச் சாதனைகளை படைத்தனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<