“புதிய தலைவரை நியமிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை” – பிரமோதய

India tour of Sri Lanka 2021

461

இலங்கை அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் எந்த வெற்றியும் பெறாமல் நாடு திரும்பவுள்ளது. இந்த தொடரின் இறுதி ஒருநாள் போட்டியில் மாத்திரம் மழை குறுக்கிட்டதால், ஐசிசி சுப்பர் லீக்கில் முதல் புள்ளியை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாட டில்ஷானுக்கு அழைப்பு

இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தலைமை தாங்கிய குசல் பெரேராவுக்கு பதிலாக, புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பிரமோதய விக்ரமசிங்க இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டு அணிகளும் ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடவுள்ளது. குறித்த தொடரில், இலங்கை அணியின் தலைமைத்துவம் தொடர்பில் கேள்வி வெளியான போதே, பிரமோதய விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரமோதய விக்ரமசிங்க குறிப்பிடுகையில், அணித்தலைவரை நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. குழாம் ஒன்றை பெயரிட்ட பின்னர், அதிலிருந்து ஒருவரை அணித்தலைவராக நியமிக்கலாம். எனினும், இங்கிலாந்து தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினராக ரொமேஷ் கலுவிதாரன செயற்பட்டிருந்தார்.

தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டியதில் அவருடைய பங்கு அதிகம். அத்துடன், பயிற்றுவிப்பு குழாம், இலங்கை கிரிக்கெட் சபை, தொழிநுட்ப மற்றும் ஆலோசனைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடி, நாம் எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பது என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றார்.

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்காக குசல் பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொடர்களையடுத்து தலைமைத்துவம் தொடர்பில் ஆராயப்படும் என இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…