கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான நேற்றைய தினம், மைதான நிகழ்ச்சிகளைப் போன்று சுவட்டு மைதான போட்டிகளிலும் வீர, வீராங்கனைகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ செயற்கை ஓடுபாதையில் போட்டி சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தனர்.

புவிதரனின் புதிய மைல்கல்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

இதன்படி, 2017 இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலை நாட்டிய போட்டி சாதனையை அவர் முறியடித்தார்.

அனித்தாவின் சாதனையுடன் கனிஷ்ட மெய்வல்லுனரில் 8 போட்டி சாதனைகள் முறியடிப்பு

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபில்ஷன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதூஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நெப்தலிக்கு ஏமாற்றம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் தொடர்ச்சியாக 4 வருடங்களாக தங்கப் பதக்கம் வென்று வந்த யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனுக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.61 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து போட்டி சாதனை படைத்திருந்த அவருக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஆரம்ப சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

தினேஷுக்கு முதல் தங்கம்

23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கே. தினேஷ், 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அண்மைக்காலமாக 20 வயதுக்கு உட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் வெற்றிகளைப் பதிவு செய்து வந்த யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். டிலக்ஷன், 23 வயதுப் பிரிவில் தான் பங்குபற்றிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.15 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவருக்கு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் சுற்றில் 4.10 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு முடியாது போனமை குறிப்பிடத்தக்கது.

திஷாந்துக்கு சாதனை வெற்றி

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதல் தடவையாக பங்குபற்றிய யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திஷாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த காலங்களில் நீளம் பாய்தல் மற்றும் சட்டவேலி ஓட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த திஷாந்த், அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளர் பிரதீபனின் வழிகாட்டலுடன் கடந்த சில மாதங்களாக கோலூன்றிப் பாய்தலில் அவதானம் செலுத்தியிருந்தார்.

இதனையடுத்து இம்முறை நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் பலத்த எதிர்பார்ப்புடன் கலந்து கொண்ட திஷாந்த், 3.90 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் புவிதரன் புதிய சாதனை

இதேநேரம், குறித்த போட்டியில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்களான ஏ. பவிதரன் (3.80 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், என். பானுஜன் (3.70 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

ஹார்ட்லி வீரர்கள் அபாரம்

56 ஆவது கனிஷட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான நேற்றைய தினம் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றனர்.

இதில், 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக கலந்து கொண்ட எஸ். பிரகாஷ்ராஜ், வெள்ளிப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இவ்வருடத்துக்கான தனது சிறந்த தூரத்தையும் பதிவு செய்தார்.

எனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 40.35 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த எஸ். பிரகாஷ்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ரக்வானை ரத்னாலோக்க மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லஹிரு கேஷான், 43.83 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் சவீன் ருமேஷக, 41.31 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்

இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியின் எஸ்.மிதுன் ராஜ், 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

தேசிய சாதனை நிகழ்த்தும் இலக்குடன் என். டக்சிதா

எனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்து கொண்ட மிதுன் ராஜுக்கு 4 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

குறித்த போட்டியில் 13.94 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும், 13.91 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ரக்வானை ரத்னாலோக்க மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சமிந்து நிமந்த வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

குண்டு எறிதலில் நுஸ்ரத் அபாரம்

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்துக்கு முதலாவது பதக்கத்தை திருகோணமலை மெய்வல்லுனர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நுஸ்ரத் பாணு, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் கலந்து கொண்ட அவர், 9.09 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் பளுதூக்கல் போட்டிகளில் மாகாண மட்ட சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள நுஸ்ரத் பாணு, கடந்த இரண்டு வருடங்களாக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான நுஸ்ரத், தரம் 8 இல் இருந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதுடன், தனது ஆரம்ப கால பயிற்சிகளை நிஷா ஆசிரியையிடம் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், உமா சுந்தர் ஆசிரியரிடம் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நுஸ்ரத் பாணு, 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

இதேநேரம், கடந்த 3 வருடங்களாக பளுதூக்கல் போட்டிகளிலும் பங்குபற்றி தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்று வருகின்ற நுஸ்ரத் பாணு, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மகாண அணிக்கும் தெரிவாகியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சபானும், சச்சித்தும் இரட்டை சாதனை

23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்து கொண்ட லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழத்தின் மொஹமட் சபான் மற்றும் கொழும்பு மெய்வல்லுனர் சங்கத்தின் சச்சித் நிலக்ஷ பெரோ ஆகிய வீரர்கள் 21.50 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து ஒரே போட்டியில் போட்டி சாதனைகளை பகிர்ந்து கொண்டனர்.

80 வருடங்களின் பின் பொதுநலவாய போட்டி வரலாற்றில் சிறப்பித்த இலங்கை

இதேநேரம், குறித்த போட்டியில் அதே வயதுப் பிரிவில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு போட்டியை 21.60 செக்கன்களில் நிறைவு செய்த எஸ்.எல் விக்ரமசிங்க மற்றும் எஸ்.எஸ் பெரேரா ஆகிய வீரர்களினால் நிலைநாட்டப்பட்ட ஒரே போட்டி சாதனையை இவ்விரு வீரர்களும் இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரான மொஹமட் சபான், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்றார்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.61 செக்கன்களில் நிறைவு செய்து, முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றரில் மேலும் 3 சாதனைகள்

நேற்றைய தினம் நடைபெற்ற 16, 18, 20 மற்றும் 23 ஆகிய 4 வயதுப் பிரிவுகளுக்குமான 200 மீற்றர் ஓட்டப் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்தன. இதில் 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் நாவலை ஜனாதிபதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்க (25.80 செக்.) மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஷெலிந்தா ஜனேசன் (24.98 செக்.) ஆகியோர் தத்தமது வயதுப் பிரிவில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

அத்துடன், நேற்று முன்தினம் (23) நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் போட்டியில் காவிந்தி நிகழ்த்திய சாதனையை அவரே நேற்று முறியடித்ததுடன்,  18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றரில் 32 வருடங்கள் பழைமை வாய்ந்த சாதனையை ஷெலிந்தா ஜனேசன் முறியடித்தார்.

இதனையடுத்து 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன (21.38 செக்.) மற்றுமொரு போட்டி சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.