பாக். அணி வீரர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளியீடு

289
Image Courtesy - Fox Sports

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷிட் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஊக்கமருந்து பாவனையும், ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களும் தான். அதிக திறமைகள் கொண்ட வீரர்களாக இருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளினால் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வாறே அடியோடு மண்ணாக போகின்றது.

அந்த அடிப்படையில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரரான நசீர் ஜம்ஷிட் ஆட்ட நிர்ணய சதிகளில் ஈடுபட்டுள்ளமைக்கான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகில தனன்ஞயவின் போட்டித் தடையும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமும்

பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பருவகாலத்தின் போது ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

நசீர் ஜம்ஷிட் மீது சுமத்தப்பட்டுள்ள 7 வகையான குற்றச்சாட்டுக்களில் 5 குற்றங்களுடன் அவர் தொடர்பு கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தண்டனைக்காலத்தில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அது மாத்திரமல்லாமல் குறித்த தண்டனைக் காலம் முடிவடைந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்ந்த எவ்வித பதவிகளையும் தனது வாழ்நாளிலும் கூட வகிக்க முடியாது எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர் கிரிக்கெட்டுக்குள் சூதாட்டத்தை கொண்டுவரும் தரகர்களிடம் நேரடியான தொடர்புகளை கொண்டிருந்தமையும், ஏனைய வீரர்களை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட வைப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்துள்ளார். குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி இவர் என்பதை ஊழல் தடுப்பு பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், பாகிஸ்தான் சுபர் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டித் தொடர்களின் போது ஸ்பொட் பிக்ஸிங்கில் (Spot fixing) ஈடுபட்டதாக தெரிவித்து 33 வயதான முஹம்மட் இஜாஸ் மற்றும் 35 வயதான யூசுப் அன்வர் ஆகிய பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் 2 தடவைகள் இலஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி மென்செஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் தங்களது வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் வீரர்களான ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோர் 5 ஆண்டுகள் போட்டித்தடைக்கு உள்ளாகியிருக்கின்ற அதேவேளை, முஹம்மட் நவாஸ் மற்றும் முஹம்மட் இர்பான் ஆகியோர் குறுகிய கால தடைக்கு உள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்னும் பல பாகிஸ்தான் வீரர்கள் ஊக்க மருந்து பாவனையில் தடைக்கு உள்ளாகி தற்போது மீண்டும் தேசிய அணியில் விளையாடி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஐ.சி.சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிசர்ட்சன் தெரிவிக்கையில், ”எங்களது பெரும்பாலான முயற்சிகள் கிரிக்கெட்டில் பிழை செய்பவர்களுக்கு தடையாக இருக்கின்றது. அதாவது கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறுகின்ற தவறான விடயங்களை குற்றமாக அரசாங்கத்திடம் கொண்டு சென்று அதற்கு ஒரு சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தவறு செய்பவர்களை சிறைக்கு அனுப்ப வசதியாக இருக்கும்” என தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 29 வயதுடைய நசீர் ஜம்ஷிட் 2008 தொடக்கம் 2015 வரையிலான குறுகிய காலப்பகுதியில் 48 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 1418 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்களும் 8 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

“ஸ்டீவ் ஸ்மித் விளையாட முடியாது” ; பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி

மேலும் 18 டி20 போட்டிகளிலும், 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 ஆண்டுக்கு பிறகு இவர் விளையாடிய 2 வருட காலப்பகுதியிலும் ஒருநாள் போட்டி தவிர்ந்த மற்றய இரண்டு வகையான போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<