இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் 6 பதக்கங்களை வென்று இந்த வருடம் சாதனை படைத்தது.

அவுஸ்திரேலிய குயிண்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த(15) ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வந்தது.

பொதுநலவாய பதக்கம் வென்றவர்களுக்கு 19 மில்லியன் பணப்பரிசு

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம்…

இதன்படி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியிலில் முதலிடம் பிடிக்க, இங்கிலாந்தும்(45) இந்தியாவும்(26) அடுத்த இரண்டு இடங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டன. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இம்முறை அதிகப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி 6 பதக்கங்களுடன் 31ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் ஒன்றிணைந்து பொதுநலவாய விளையாட்டு விழாவை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்றன. இந்த ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரத்துடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் நடத்தியது.

இந்தப் போட்டித் தொடர் கடந்த 4ஆம் திகதி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. ஆனாலும் போட்டிகள் ஐந்தாம் திகதியே உத்தியோகபூர்வமாக ஆரம்மாகியிருந்தது.

அத்துடன், இம்முறை 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீர வராங்கனைகள் போட்டியில் பங்கேற்றிருந்தனர். மொத்தம் 19 விளையாட்டுக்ளில் 275 பிரிவுகளின் கீழ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மொத்தம் 845 பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. முதற்தடவையாக ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான முறையில் பதக்கங்களை பகிர்ந்தளிப்பதற்கு இம்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், இம்முறை விளையாட்டு விழாவில் பங்கேற்ற வனாட்டு, குக் தீவுகள், சொலமன் தீவுகள், பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகள், டொமினிக்கா ஆகிய நாடுகள் முதற்தடவையாக பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணி புதிய சாதனை

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்…

அத்துடன், இம்முறை பங்குபற்றிய 71 நாடுகளில் 43 நாடுகள் பதக்கங்களை வென்றன. முன்னதாக மென்செஸ்டர்(2002), மெல்பேர்ன்(2006) ஆகிய விளையாட்டு விழாக்களில் அதிகபட்மாக 39 நாடுகளே பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை விளையாட்டு விழாவில் 9 உலக சாதனைகளும், 83 விளையாட்டு விழா சாதனைகளும் நிகழ்த்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கைக்கு 6 பதக்கங்கள்

1930ஆம் ஆண்டில் முதல் முறையாக இலங்கை பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தது. இதில் சிலோன் என்ற பெயரில் இங்கிலாந்து கொடியின் கீழ் இலங்கை வீரர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை முதன்முதலில் 1938ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் வில்லியம் ஹென்றிகஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து 1950ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வெற்றிக்கொண்டமையே இலங்கை அணி அதிக பதக்கங்களை வென்ற விளையாட்டு விழாவாக இடம்பெற்றது.

இப்படியே ஆரம்பமான இலங்கையின் பதக்க வெற்றியானது சுமார் 68 வருடங்களாக மூன்றைத் தாண்டியதில்லை. இறுதியாக 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இலங்கைக்கு ஒரேயொரு பதக்கத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை இலங்கை அணி ஒரு வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஆறு பதக்கங்களை வென்று 80 வருடங்களுக்குப் பிறகு அதிக பதக்கங்களை வென்று சாதனையும் படைத்தது.

இந்த 6 பதக்கங்களையும் பளுதூக்கல் மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் இலங்கை அணி வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குத்துச்சண்டையில் சாதனை

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டிப் பிரிவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை அனூஷா தில்ருக்ஷி கொடித்துவக்கு பெற்றுக்கொடுத்தார்.

இதேநேரம், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 68 வருடங்களுக்குப் பிறகு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணி மேலும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ThePapare Tamil weekly sports roundup – Episode 24

Uploaded by ThePapare.com on 2018-04-18.

இதில் ஆண்களுக்கான 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட திவங்க ரணசிங்கவும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இஷான் பண்டாரவும் இவ்வாறு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

எனினும், இந்திய வீரருக்கு பலத்த போட்டியைக் கொடுத்து போராடித் தோல்வியைத் தழுவிய இலங்கை வீரர் இஷான் பண்டார, இறுதியில் இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

பளுதூக்கலில் ஹெட்ரிக்

இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் விழாவில் பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணி, ஹெட்ரிக் பதக்கத்தை வென்று அசத்தியது.

இதில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சத்துரங்க லக்மால் வென்று கொடுத்தார். ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குபற்றி அவர், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான 48 கிலோகிராம் பிரிவில் இலங்கையின் தினூஷா ஹன்சனி கோமஸ், வெண்கலப் பதக்கம் வென்றிருந்ததுடன், பளுதூக்கலில் பெண்கள் பிரிவில் முதல் பதக்கத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?

விளையாட்டுகள் உலகளாவிய ரீதியில்…

இந்த நிலையில், ஆண்களுக்கான பளுதூக்கல் 69 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கையின் இந்திக சதுரங்க திசாநாயக்க வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியதுடன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் தனது முதலாவது பதக்கத்தையும் வென்றார்.

இந்த இரு விளையாட்டுக்களைத் தவிர வேறு எதிலும் இலங்கைக்கு பெரிதாக பிரகாசிக்க முடியாமல் போனது.

பெட்மிண்டன் அரையிறுதியில் இலங்கை

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு பெட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணத்திலக்க ஜோடி பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதியில் 2-1 என்ற செட் கணக்கில் கனடா அணியினை வீழ்த்திய இலங்கை அணி, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக பெட்மிண்டன் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

எனினும், ஆண்களுக்கான இரட்டையர் பெட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பிரபல இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான…

நீச்சலில் மெத்யூ அபாரம்

இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, இம்முறை விளையாட்டு விழாவில் 50 மீற்றர் சாதாரண நீச்சல் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்டு 22.84 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் 22.65 செக்கன்களில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை அவர் முறியடித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியிலும் புதிய தேசிய சாதனை நிகழ்த்திய மெத்யூ அபேசிங்க, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

எனினும், அரையிறுதியில் 49.43 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மெத்யூ, 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார்.

68 வருடங்களுக்குப் பிறகு….

பொதுநலவாய விளையாட்டு விழாவில் 68 வருடங்களுக்குப் பிறகு ஆண்களுக்கான 4 X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி உலகின் முன்னணி வீரர்களுடன் ஓடி ஆறாவது இடத்தைப் பெற்று ரலாறு படைத்தது.

 ஜமைக்கா மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை அணி, போட்டியை 39.08 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனையும் நிகழ்த்தியது.

2022இல் பேர்மிங்ஹமில்

22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹெமில் நடைபெறவுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப் பெரிய செலவிலான விளையாட்டு விழாவொன்றை இங்கிலாந்து நடத்தவுள்ளது.

முன்னதாக 2014இல் ஸ்கொட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலும், 2002இல் மென்செஸ்டரிலும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா நடைபெற்றிருந்ததுடன் 1934இல் லண்டன், 1958இல் கார்டிப், 1970 மற்றும் 1986இல் எடின்பேர்ங் ஆகிய நகரங்களிலும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி, 21ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுநலவாய விளையாட்டு விழா இதுவாகும்.